Sunday 18 May 2014

VGK அவர்களின் சிறுகதை விமர்சனப் போட்டியில் முதல் பரிசு!

VGK அவர்களின் சிறுகதை விமர்சனப் போட்டியில் முதல் பரிசு!

மதிப்பிற்குரிய திரு. வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் நடத்திவரும் சிறுகதை விமர்சனப் போட்டியில்
VGK 15 – ‘ ழை ப் பு’
சிறுகதையின் விமர்சனத்திற்கு எனக்கு
முதன் முதலாக
முதல் பரிசு
 கிடைத்துள்ளது என்பதை மிகுந்த மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்! இது நான் பெறும் மூன்றாம் பரிசாகும்! எனது விமர்சனங்களைப் படித்து கருத்திட்டு, வாழ்த்திவரும் வலைப்பூ சகோதர சகோதரிகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். வாய்ப்பளித்த திரு வை.கோ அவர்களுக்கும் எனது விமர்சனத்தை முதல் பரிசுக்கு தெரிவு செய்த நடுவர் ஐயா அவர்களுக்கும் மீண்டும் எனது மனமார்ந்த நன்றிகள்
‘அழைப்பு’ சிறுகதைக்கான இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2014/04/vgk-15.html
முதல் பரிசுபெற்றதனை அறிவிக்கும்  இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2014/05/vgk-15-01-03-first-prize-winners.html#comment-form
ஹாட்ரிக் பரிசு வென்றதனை அறிவிக்கும் இணைப்பு:
என்னுடைய விமர்சனம் இதோ இங்கே!:

அழைப்பு’ என்ற தலைப்பே எதற்கான அழைப்பு? யாருக்கான அழைப்பு என்ற கேள்விகளை நமக்குள் ஏழுப்பி கதைக்குள் முதலில் நம்மை ‘அழைக்கிறது’.
அடுத்த வரியிலேயே கல்யாணத்திற்கான ‘அழைப்பு’தான் என்று நமக்குத்தெரியப்படுத்தி ஒரு சுவாரசியம் கூட்டுகிறது.
“வீட்டைக் கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார்” என்ற பழமொழி பலவித வசதிகளும் வந்துவிட்ட இக்காலத்தில் ஏறக்குறைய பழைய மொழி ஆகி, திருமண கான்ட்ராக்டர்கள் பந்தல்போடுவது முதல் கட்டு சோறு கொடுத்து மணமக்களை வழியனுப்புவதுவரை எல்லாவற்றையும் முறையாக செய்துகொடுக்கும் நிலை இருந்தாலும் கூட அழைப்பிதழ் அடித்து அதனை வினியோகித்து திருமணத்திற்கு ‘அழைப்பு  விடுப்பது எந்த அளவிற்கு சிரமம் அதன் தொடர்ச்சியான நிகழ்வுகள் என்ன இவையே கதையின் கரு.

       மகனுக்குத் திருமணம் செய்பவர்கள் பெரும்பாலும் அறுபதைக் கடந்தவர்கள் என்பதால் உடல் உபாதைகள் படுத்துவதும், மன அமைதிநாடி கோயிலுக்கு செல்வதனை வழக்கமாகக் கொண்டிருப்பதும் யதார்த்தமான ஒன்று. அவ்வாறு கோயிலில் அமர்ந்து தினசரி அனுபவங்களை நண்பருடன் பகிர்ந்துகொள்வது கதை நகரும் முக்கியக் களமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. வெளியூரிலிருப்பவர்களுக்கு ரயில் டிக்கெட் பதிவு செய்திட ஏதுவாக முன்கூட்டியே அழைப்பிதழ்கள் அனுப்பி அவற்றை பட்டியலில் குறித்துக் கொள்ளும் அளவிற்கு முறையாகச்செய்தபோதிலும் உள்ளூரில் உள்ள நண்பர்களையும், உறவினர்களையும் நேரில் சென்று அழைப்பதில் உள்ள சிரமங்களே திரைக்கதைபோல சுவாரசியமாக அமைக்கப்பட்டுள்ளது.

உள்ளூரில் உள்ளவர்களுக்கு கொடுக்கவேண்டிய அழைப்பிதழ்களை எட்டுதிசைகள் வாரியாக அடுக்கிக்கொண்டு அதன் வினியோகிக்கத் தயாராகின்ற கட்டத்தில்தான் கதை சூடுபிடிக்கத்துவங்குகிறது.
முதலில் கிளம்பும் படலம். மணமகனின் அம்மா காபி, டிபன், டிவி சீரியல் முடித்து கிளம்ப நான்கு மணியாவதும், கிளம்பிய பின்னரும் டிராஃபிக் ஜாம், ஒன்வே, சிக்னலில் நிற்பது, ஏறக்குறைய ஒரேமாதிரியான பேரில் அடுக்குமாடிக்கட்டிடங்கள், அவற்றில் லிஃப்ட் இல்லாதது, இருந்தாலும் மின்வெட்டு மற்றும் இதர ரிப்பேர்களால் இயங்காதது, சுப்ரமணியன் போன்ற பொதுவான பெயர்களில் பலர் இருப்பதால் ஏற்படும் குழப்பங்கள், வாட்ச்மேன்களின் கெடுபிடிகள், நாய்த்தொல்லைகள், பூட்டியிருக்கும் வீடுகள்,… இத்யாதி…இத்யாதி…அப்பப்பா எத்தனை இடர்கள். நிச்சயம் வாசகர் ஒவ்வொருவருக்கும் இதுபோன்ற சூழ்நிலையில் தாம் பட்ட சிரமங்களை இக்கதை கண்முன்னே நிறுத்தும். (ஆட்டோவில் செல்லும் நிலைமூலம் நடுத்தரவர்க்கக் குடும்பம் என்பது தெளிவாகிறது!)
அடுத்ததாக, பத்திரிக்கை கொடுத்தபின்னர் சிலர் அதனை பிரித்தும் பாராமல் அலட்சியமாக வாங்கி வைப்பது, கண்முன்னாலேயே பத்திரிக்கை மேலே போன் நம்பர்கள் எழுதுவது, பத்திரிக்கையை கையில் வாங்கி வைத்துக்கொண்டு கல்யாணத் தேதி, முகூர்த்த நேரம், மண்டபம் என்று கேள்வி மேல் கேள்விகள். சிலர் தனது மகனுக்கோ அல்லது மகளுக்கோ வரன் கிடைத்தால் சொல்லுமாறு ஜாதகப் பிரதி கொடுப்பது, டிவியில் தன் கவனத்தை வைத்துக் கொண்டு விளம்பர இடைவேளையில் வேண்டா வெறுப்பாகப் பேசி அனுப்பும் மனிதர்கள், தூக்கம் கெட்டது என எரிச்சலை முகத்தில் காண்பிப்பவர்கள், வந்தவர்களுக்கு முக்கியத்துவம் தராமல் தொ(ல்)லை பேசியில் அல்லது அலைபேசியில் பேசிக்கொண்டே இருப்பவர்கள், திருடர் பயத்தில் கதவையே திறக்கலாமா வேண்டாமா என்று யோசிப்பவர்கள்….உஸ்ஸ்ஸ்ஸ்…அப்பப்பா மனிதரில் எத்தனை நிறங்கள் என்று வாசகனையே அங்கலாய்க்கவைத்துவிடுகிறார் ஆசிரியர். வந்தவர்களுக்கு குடிப்பதற்கு தண்ணீராவது தருபவர்கள் ஐந்து சதவிகிதமே என்று நொந்துகொள்ளச் செய்தும் விடுகிறார்.
இதற்கு இடையில் இரட்டைப் பெண்டாட்டிக்காரரின் வீட்டிற்கு அழைப்பு கொடுக்க சென்றபோது காணும் மூன்றாவது பெண்மணி யாரென்று கேள்விக்கு விடைகிடைக்காமல் திரும்புவது, ஆட்டோவுக்கு செய்யும் அதிகப்படியான செலவு, என்று அழைப்பு அனுபவங்கள் எல்லாவற்றையும் கோயிலில் நண்பரோடு பகிர்ந்துகொண்டு ஆறுதல் படுகிறார். அத்தோடு முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தனாகஅழைப்புகளை வினியோகிக்கும் வேலையைத் தொடர்கிறார்.
காலங்கள் மாறினாலும் சில விஷயங்கள் மாறுவதில்லை என்பதற்கு  நல்லுதாரணங்களாய், சந்தனம், கல்கண்டு கொடுத்து, பன்னீர் தெளித்து, பத்தாததற்கு ரோஜா மணத்தினை அளிக்கும் சென்ட் ஸ்ப்ரேயர் அமைத்து அருமையான வரவேற்பு அளிக்கப்படுகிறது.  திருமணத்திற்கு வருபவர்களுக்கு ஷோ ரூமே வரவேற்புதானே!

அடுத்ததாக விருந்து. திருமணத்திற்கு வருவோரில் பலரும் நேராக விருந்து நடைபெறும் இடத்திற்கே நேரடியாக சென்று விருந்தினை உண்டுவிட்டு அந்த வேலைமுடிந்ததும் நேரடியாக மணவறைக்குச் சென்று அன்பளிப்பினையோ அல்லது மொய்ப்பணத்தினையோ மணமகன்/மணமகள் கையில்கொடுக்கும்பொழுது, போட்டோ மற்றும் வீடியோவிற்கு போஸ் கொடுத்துவிட்டு நடையைக்கட்டும் நடைமுறையே இப்போதெல்லாம் காணப்படுகிறது.  மற்றசிலரோ, விருந்து முடிந்ததும், வேறு தெரிந்த நபர் எவர்கையிலாவது அன்பளிப்பினைக்கொடுத்து சேர்ப்பிக்கச்சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகிவிடுவதும் யதார்த்தமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.

சற்றே தூரத்து உறவினர்களில் ஆண்களென்றால், ஊர்வம்பிலோ அல்லது அரசியல் அரட்டையிலோ ஈடுபடுவதும், அதுவே பெண்களென்றால், நகைகள், மேட்சிங் ப்ளவுஸ், டிவி சீரியல், இதுகுறித்த பேச்சாக இருப்பதும் சுவைபடச் சித்தரிக்கப்பட்டுள்ளது.  இதனூடே மிகவும் தெரிந்ததுபோல் வணக்கம் சொல்லும் மனிதர்கள் குறித்த நகைச்சுவையான சித்தரிப்பும் உள்ளது!

       இதுவரை சரிதான், பத்திரிக்கை வைத்த பெரியவரிடம் விசாரித்துவிட்டு சொல்லிக்கொண்டு கிளம்பலாம் என்றால் அவர் எங்கே? சினிமாவில் கேமரா ஒவ்வொரு அறையாக தேடுவது மனக்கண்ணில் எழுகிறது.  ஆமாம்… அவர்தான் எங்கே?

 திருமண நிகழ்ச்சிகள் விறுவிறுப்பாக நடக்கும் நேரத்தில் மணமகனின் அப்பாவை எங்கே எங்கே தேடியும் கிடைக்காமல் அவரது மனைவியிடம் ‘சார் எங்கே’ என்று கேட்கும்பொழுது கதை உச்சகட்டத்தை அடைந்துகொண்டிருப்பதை நம்மால் உணரமுடிகிறது. அப்பொழுது அவரது மனைவி வெளிப்படுத்தும் ‘எங்காத்து’ மனுஷா என்றாலே சற்று கம்மிதான் இவருக்கு – என்ற எண்ணக்கிடக்கை, திருமணமாகி எத்தனை வருடமானாலும் இந்த விஷயங்கள் அடிமனதில் ஒரு ஓரத்தில் ஓடிக்கொண்டிருப்பது கோடிட்டுக்காட்டப்பட்டுள்ளது புன்னகையை வரவழைக்கிறது.

மணமேடைக்குப்பின் இருக்கும் மணமகன் அறையில்தான் அவர் இருக்கிறார் என்றறிந்து அங்கே சென்று பார்த்தால்….பெரிய்ய்ய்ய்ய பஞ்சாயத்து நடந்துகொண்டிருக்கிறது!     மணமகனின் மாமா முகத்தைத்திருப்பிக்கொண்டு, முதுகைக்காட்டியபடி அமர்ந்திருக்கிறார்.  தாய்மாமனின் உரிமை, அவருக்குத் தரப்படவேண்டிய முக்கியத்துவம் குறைந்ததான எண்ணம் அவருக்கு ஏற்பட்டதால், அவர் வெளிப்படுத்தும் கோபத்தின் உச்சகட்டம், இவை எல்லாமே அவர் உட்கார்ந்திருக்கும் நிலையினைக்கொண்டே புரியவைப்பதான அற்புதக்காட்சி அமைப்பு! அருமை! இந்த உச்சகட்ட நிலைமையில் அடுத்து யார் என்ன செய்வது? வாசகனின் தலைக்கு மேலே பல கேள்விக்குறிகள்!

அந்த நேரத்தில்தான் கதைசொல்லியான இரண்டாவது கதாநாயகனின் நுழைவு.  நேரே மணமகனின் அப்பாவிடம் சென்று, ”என்ன ஸ்வாமி உம்மை எங்கேயுமே காணுமேன்னு தேடிண்டு இருக்கேன். இங்க என்ன பண்றேள்? ஆமாம் இந்த ஸார் யாரு?” என்கிறார்.

அதற்கு பதிலாக.
     ”இந்த ஸார் தான், என் மச்சினர். மும்பையிலிருந்து என்னுடன் சண்டை போட மட்டுமே, ப்ளேன் பிடித்து வந்திருக்கிறார்; நீரே நியாயத்தைச் சொல்லும்;  நானும், இவர் தங்கையும் இப்போது இருக்கும் உடம்பு நிலையில், மும்பைக்கு நேரில் இவர் வீட்டுக்குப்போய் பத்திரிக்கை கொடுத்து அழைத்து வர முடியுமா?  சொன்னால் புரிந்து கொள்ளாமல் மிகவும் கோபமாக இருக்கிறார். சுபகார்யங்கள் நல்லபடியாக அடுத்தடுத்து நடக்கணுமேன்னு எனக்கு ஒரே கவலையா இருக்கு” என்கிறார் மணமகனின் அப்பா.”

     ஒருசில வரி வசனங்களிலேயே, நிலவும் சூழ்நிலைக்கு என்ன காரணம் என்ற செய்தி மிகவும் அருமையாக சொல்லப்பட்டுவிடுகிறது. உறவினர்கள் எவராவது தலையிட்டால் சம்பந்தப்பட்ட மணமகனின் தாய் மாமன் எவ்வாறு சமாதானமடைவார்? அது மேலும் மேலும் ப்ரச்சனையை பெரிதாக்குமே தவிர சரிசெய்யமுடியுமா? இங்கேதான் வருகிறது கதையின் அதிமுக்கியத்திருப்பம்.

    மணமகனின் அப்பாவைப் பார்த்துக் கண்ணடித்தவாறே, “என்ன இருந்தாலும் சொந்த மச்சினர். மனைவியோடு கூடப்பிறந்த ஒரே அண்ணா. உம்ம பையனுக்கு, ஊஞ்சலுக்கு மாலை எடுத்துத் தரவேண்டிய சொந்தத் தாய் மாமா; அவர் சொல்வதில் என்ன தப்பு இருக்கு? இங்கே இருக்கிற மும்பைக்குப் போய் நேரில் அழைக்காமல் விட்டது நீர் செய்த மிகப்பெரிய தப்பு ஸ்வாமி ...... சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீரும் ...... நீர் செய்தது மிகவும் அயோக்யத்தனம்; மனசு இருந்தால் நீங்களும் மாமியும் ப்ளேன் பிடித்துப்போய் ஒரே நாளில் அழைத்து விட்டுத் திரும்பியிருக்கலாம். மும்பை என்ன, வெளிநாடா! பாஸ்போர்ட் விசா எல்லாம் வாங்கணுமேன்னு கவலைப்படுவதற்கு. ப்ளேன் ஏறினால் இங்கிருந்து ஒரு மணி நேரப்பயணம். என்னிடம் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் நானே உங்களுடன் மும்பை வரை துணைக்கு கூட வந்திருப்பேன்; நான் மட்டும் உங்கள் மச்சினராக, இந்த ஸாரோட நிலைமையில் இருந்திருந்தால், நடக்கிறதே வேறு; நேரில் வந்து அழைக்காத இந்தக் கல்யாணத்திற்கு வந்திருக்கவே மாட்டேன்;   ஏதோ இருந்து இருந்து இருப்பதே ஒரே ஒரு மறுமான் (மறுமான்=சகோதரியின் பிள்ளை) அவனுக்குக் கல்யாணம்; நாம் போய் கலந்து கொள்ளாவிட்டால் நன்றாக இருக்காது, என்று பெரிய மனசு பண்ணி, ஸார் வந்திருக்கிறார், தெரியுமா?” என்று சற்றே உரத்த குரலில் கூறி தாய்மாமனை முதலில் தன் கட்சியில் சேர்த்துக்கொள்கிறார் இரண்டாம் கதாநாயகரான கதை சொல்லி.

     மணமகனின் ‘தாய்’மாமனாக இருந்தபோதும், இவரே முன்னின்று அனைத்து வேலைகளையும் செய்யவேண்டிய நிலையில் இருந்தபோதும் ‘ஈகோ’ காரணமாக, அவரே செய்யவேண்டிய கடமைகளைக்கூட செய்யாமல் அனைவரின் கவனத்தையும் கவரும் விதமாக ‘முறுக்கி’க்கொண்டு உட்கார்ந்திருக்கிறார். இப்படித் தன்னையே ‘பெரும்’ஆளாக நினைத்துக்கொண்டு இடைஞ்சலாக இருப்பவரை எப்படி சரி செய்யலாம்? இங்கேதான் வெளிப்படுகிறது உண்மை நட்பு!  தாய் மாமன் எனும்‘பெரும்’ஆளை அந்த காக்கும் கடவுளான ‘பெருமாளாகவே’ மனதில் வரித்து காலில் விழுந்து சாஷ்டாங்கமாக நமஸ்கரித்துமன்னித்தருளுமாறு நண்பருக்காக மன்னிப்புக் கேட்கிறார்.  (மணமகனின் தந்தை அல்ல, கதைசொல்லியே உண்மைக் கதாநாயகன் என்று இவ்விடத்தில் சொல்லாமல் சொல்கிறார்.) 


     அவ்வளவுதான்! சூழ்நிலையே தலைகீழாக மாறிவிடுகிறது.  கோபம் தணிந்த தாய் மாமன், ராமன் - விபீஷணனை கட்டி அணைப்பதுபோல கட்டியணைத்து நட்பாகி, திருமணத்தின் முக்கிய சடங்குகளில் ஒன்றான காசியாத்திரைக்கு தேவையானவற்றில் மூழ்கிவிட, பின்னர் ஒன்றொன்றாக திருமணச்சடங்குகள் எல்லாம் சிறப்பாகவே நடந்து முடிகிறது. முடிந்த கையோடு, மருமகனையும் அவன் மனைவியையும் தேன் நிலவுக்கு தனது ஊரான மும்பைக்கு வருமாறு ‘அழைப்பு’விடுக்கிறார். உடன்வர விருப்பம் தெரிவிக்கும் மைத்துனரை சீமந்தத்திற்கு  அழைப்பு’ கொடுக்க நேரில் (அப்பொழுதாவது) வருமாறும், அப்பொழுது நண்பரையும் (அங்கேயும் பஞ்சாயத்தா?!) உடன் அழைத்துவருமாறும்  அவருக்கும் சேர்த்து ‘அழைப்பு’ விடுக்கிறார்

    அனைவரின் வாழ்க்கையிலும் ‘அழைப்பு’கள் தொடரும் – இறுதியாக ஒரு அழைப்பு வரும் வரையிலும். கதாசிரியரே தன்னைத்தானே பாத்திரப்படுத்திக்கொண்டு, நட்பிற்கு உதாரணமாக - சிக்கல் வரும் வேளையில் அதனை சரிப்படுத்தி, கூடவே அற்புதமான (ஓவியர் கோபுலுவின் படங்கள் மற்றும் புகைப்படங்கள் மூலமாக) கல்யாணக் காட்சிகளை கண்முன்னே நிறுத்தி (பாலகுமாரன் மற்றும் ஆர்தர் ஹெய்லி ஆகிய எழுத்தாளர்களை ஒத்த காட்சி அமைப்புகளின் மூலம்), ‘ஹம் ஆப் கே ஹைன் கோன்’ ஹிந்தி திரைப்படத்தைப்போல ஒரு முழுமையான திருமணத்திற்கே சென்றுவந்த உணர்வினையும் ஏற்படுத்தி கதையை சுபமாக முடித்துவைக்கிறார்.


வாசகனை ஈர்த்து, இந்தக்கதையை படிக்க விருப்பம் ஏற்படுத்தி, சுபமான முடிவுடன் இந்தக் கதையை முடித்துவிட்டு தன் மற்றகதைகளையும் வாசகர்கள் படிக்கவேண்டும் என்ற மறைமுகமான ஆர்வத்தைத்தூண்டி கதாசிரியர் விடுக்கிறார் ஒரு மவுன ‘அழைப்பு

10 comments:

  1. அருமையான விமர்சனம் ..பரிசு பெற்றதற்கு
    இனிய வாழ்த்துகள்..பாராட்டுக்கள்.!

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி! ஹாட்ரிக் உள்பட பல்வேறு பரிசுகளை வென்றுள்ள தங்களின் மனம் திறந்த பாராட்டிற்கு எனது மனமார்ந்த நன்றி!

      Delete
  2. உயர்திரு நடுவர் அவர்கள் சார்பிலும் என் சார்பிலும் தங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள் + அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    முதல் பரிசு + ஹாட்-ட்ரிக் பரிசு ஆகிய இரண்டும் ஒரே நேரத்தில் தங்களுக்குக் கிடைத்துள்ளது மேலும் மகிழ்ச்சியளிக்கிறது.

    இந்தப் போட்டியில் தங்களின் மீண்டும் வெற்றியை தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளதற்கு என் நன்றிகள்.

    மேலும் மேலும் தொடர்ந்து இதே போட்டிகளில் கலந்துகொண்டு, மேலும் மேலும் பல்வேறு பரிசுகள் வென்றிட என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

    அன்புள்ள VGK

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாய்ப்புகள், வாழ்த்துகள், மனம் திறந்த பாராட்டுகள் அனைத்திற்கும் எனது சிரம் தாழ்த்திய நன்றிகள் ஐயா!

      Delete
  3. பாராட்டுகள்! மேலும் பரிசுகள் பெற நல்வாழ்த்துகள் நண்பரே!

    ReplyDelete
  4. முதல் பரிசு பெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. வணக்கம்
    ஐயா.

    முதல்பரிசு பெற்றமைக்கு எனது வாழ்த்துக்கள் ஐயா..தொடரட்டும் வெற்றிகள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. அன்பான இனிய நல்வாழ்த்துகள், திரு ரவிஜீ ரவி
    Killergee
    www.killergee.blogspot.com

    ReplyDelete