Wednesday 23 November 2016

மாய(வர) மருத்துவர்…!


மாய(வர) மருத்துவர்…!
இவர் அணியும் ஆடையோ வேட்டி பனியன்
மருத்துவத் துறைக்கே இவர் ஒரு ‘பேன்யன்’ !
இவரது வார்த்தைகள் உரமளிக்கும் முந்திரி
மருத்துவம் செய்வதில் ‘பெருமாள்’ தன்வந்திரி!
அல்லாவைத் தொழுவோர்க்கு நபிகள் நாயகம்.
மாயவர மருத்துவரில் இவரே நடுநாயகம்!
          தூதர் பணிமுடிக்க காலன் கைதட்டினாலும்            
இவர் அனுமதி வேண்டி கைகட்ட வேண்டும்!
நோயென்று எவர் வரினும் ஒன்றே வைத்தியம்
சேவைக் கட்டணமோ என்றுமே ‘பத்தியம்’!
மருத்துவ முகவர் தரும் மருந்தின் சாம்பிள்
ஏழையர்க்கு கொடுக்கும் ‘ஸ்டாண்டிங் எக்ஸாம்பிள்’
 ‘தண்ணி போடாதடா’ என அவன் முதுகில் தட்டு
‘வென்னீரே குடிடா’ என என் முதுகில் ஷொட்டு!
காட்டும் கருணையில் இவர் என்றும் நிரந்தரன்
வைத்தியச் சேவையில் காக்கும் வைத்தீஸ்வரன்!
இவர் குடியிருக்கும் இடம் எளியவரின் கோயில்
பெற்ற அன்னையோ இவர் ‘குடியிருந்த கோயில்’!
இவர்தம் பேனா ஒரு மருத்துவ – மந்திரக்கோல்
பெற்றது ஏதுமில்லை - வார்த்தை தந்திரத்தில்!
இவரின் சேவை பெறும் பே(றி)ரிடம் மாயவரம்
பெற்ற மகனும் முதலிடம்; மருத்துவ-மாய’வரம்’!
ரவிஜி…!
(புகைப்படம் : ரவிஜி)

Dr.ராமமூர்த்தி அவர்களின் பெற்றோர்
திரு. S. வெங்கட்ராமன்  &  திருமதி. V. ராதை 

Dr.ராமமூர்த்தி அவர்களின் ஃபிசிக்ஸ் கையேடு


Dr.ராமமூர்த்தி அவர்களின் கெமிஸ்ட்ரி கையேடு


Dr. ராமமூர்த்தி அவர்கள் வகுப்புத் தோழர்களுடன் மருத்துவக் கல்லூரியில் எடுத்துக்கொண்ட புகைப்படம்

Dr. Ramamoorthy with his better (best) half Smt. Neela Ramamoorthy
Dr. ராமமூர்த்தி அவர்கள் தனது மனைவி திருமதி நீலா அவர்களுடன்.


Dr. ராமமூர்த்தி அவர்கள் மருத்துவமனை திறந்தபோது 
காஞ்சிப் பெரியவர் ஆசிர்வதித்து அளித்த பரிசுகள்.

Dr.ராமமூர்த்தி அவர்களின் மருத்துவமனையில் உள்ள கடவுளரின் படங்கள்.


Dr.ராமமூர்த்தி அவர்களின் மருத்துவ அறை.Dr. ராமமூர்த்தி அவர்களது வீடு புதுமனை புகுவிழாவிற்கு 
காஞ்சிப்பெரியவர் ஆசிர்வத்து அளித்த பரிசு

Dr. ராமமூர்த்தி அவர்களின் விருப்பத்திற்குரிய முருகன் படம்
இதில் முருகனின் தலைக்குமேலாக வேல் நீண்டிருப்பது சிறப்பு.


மயிலாடுதுறையில் பட்டமங்கலத்தெருவில் உள்ள 
Dr. ராமமூர்த்தி அவர்களது மருத்துவமனையின் புறத்தோற்றம்.

மருத்துவம் பயின்றபோது Dr. ராமமூர்த்தி அவர்களின்  தோற்றம்.


அப்பொல்லோ மருத்துவமனை Dr. M.V. மணி (வகுப்புத் தோழர்).

மியாட் மருத்துவமனை  Dr. மோகந்தாஸ் அவர்கள் (வகுப்புத் தோழர்).

எம்.ஜி.ஆர் அவர்கள் புரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது மருத்துவக்குழுவில் மயக்க மருந்து நிபுணராக இருந்த
Dr. ராஜலட்சுமி அவர்கள் (வகுப்புத் தோழர்)

Dr. ராமமூர்த்தி அவர்கள் பெற்ற வாழ்த்து மடல்கள்
 
 

Dr. ராமமூர்த்தி அவர்களால் கெளரவம் பெற்ற சில விருதுகள்


தான் குடியிருந்த கோயிலுடன் Dr. ராமமூர்த்தி அவர்கள்
 தனது சதாபிஷேகத்தின்போது எடுத்துக்கொண்ட படம்.


மாயவரம் பெற்ற 'மாய'-வரம்.
     “மணப்பாற மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி வயக்காட்ட உழுதுபோடு செல்லகண்ணு…” என்பது அந்த காலத்தில் மிகப்பிரபலமான ஒரு திரைப்படப்பாடல். “ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது” என்பார்கள். அவ்வளவு பெயர் பெற்ற மாயவரம் என்று அழைக்கப்படும் மயிலாடுதுறை என்றால் நினைவிற்கு வரக்கூடிய விஷயங்கள், காவிரி ஆறு, ஆடிப்பதினெட்டாம் பெருக்கு, பாதிரி மாம்பழம், காளியாகுடி ஹோட்டல், ARC நகைக்கடை, மாயூரம் வேதநாயகம் பிள்ளை, MKT என்றழைக்கப்பட்ட எம்.கே. தியாகராஜ பாகவதர், இன்னும் பல(ர்).
          பொதுவாக அவரவர்கள் செய்யும் தொழிலால்தான் மனிதர்களுக்குப் பெருமை. ஆனால் வெகுசிலரால் மட்டுமே அந்தத் தொழிலுக்கே பெருமை. இந்த வரிசையில் முக்கியமானவர் மருத்துவத்துறையின் ஒரு அடையாளமாக மாயவரத்தின் மக்கள் பலரின் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கும் மக்கள் மருத்துவர், ‘ப்ஷக் ரத்னா’ டாக்டர். V. ராமமூர்த்தி அவர்கள்.
                   ஒரு கைவைத்த பனியன் அல்லது அரைக்கை கதர் சட்டை; ஒரு நான்கு முழம் வேட்டி. நெற்றி நிறைய திருநீறு. கழுத்தில் ஸ்டெதாஸ்கோப். முகத்தில் புன்னகையுடன் யார் வந்தாலும் ஜாதி, மத, இன, மொழி வேறுபாடின்றி “வாடா/வாடி கொழந்த” என்ற ஆதூரமான ஒரு அழைப்பு. இதுதான் நமது டாக்டர் ராமமூர்த்தி.  பொய், பித்தலாட்டம், தலை கனம், பந்தா, பணத்தாசை, ஆடம்பரம், இன்னபிற வார்த்தைகளுக்கு இவரது அகராதியில் அன்றும், இன்றும், என்றும் இடமில்லை.
          மாயவரம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் மிகவும் பிரபலம் நமது மக்களின் மருத்துவர் டாக்டர். ராமமூர்த்தி. மாயவர சுற்று வட்டாரப்பகுதிகளில் ஏழை எளிய மக்கள் பலராலும் கடவுளாகவே பார்க்கப்பட்டு வரும் அவர் 1935ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18ம் நாள் நன்னிலம் தாலுக்காவைச் சேர்ந்த முடிகொண்டானில் ஏழ்மையான விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த திரு. S. வெங்கட்ராமன் அவர்களுக்கும் திருமதி. V. ராதை அவர்களுக்கும் மகனாகப் பிறந்தார். எட்டாம் வகுப்பு வரையில் முடிகொண்டான் ஹிந்து ஹையர் எலிமென்டரி ஸ்கூலிலும், 9ம் வகுப்பு முதல் 11ம் வகுப்புவரை நன்னிலம் போர்ட் ஹைஸ்கூலிலும் படித்தார். படிப்பில் சிறந்து விளங்கிய ஏழை மாணவர் என்பதால் ஏனங்குடி நாய்டு ஸ்காலர்ஷிப்பில் பள்ளிப்படிப்பினை முடித்தார். 1953ம் ஆண்டு திருச்சி செயின்ட் ஜோஸப் கல்லூரியில் இன்டர்மீடியட் படித்து அந்த ஆண்டிற்கான BEST OUTGOING STUDENT என்ற பெருமையுடன் மெட்ராஸ் மெடிகல் கல்லூரியில் 1953ல் சேர்ந்தார். 1958ல் மருத்துவப்படிப்பினை முடித்தவுடன் 1959ம் ஆண்டு மாயவரம் பெற்ற ‘மாய’வரமாய் வந்து சேர்ந்தார். ஒரு மகத்தான மருத்துவப்பணி துவங்கியது.
          மயிலாடுதுறை அரசுப்பொது மருத்துவமனையில் ஏறக்குறைய 20 ஆண்டுகள் ஹானரரிஅஸிஸ்டன்ட் சர்ஜனாகப் பணிபுரிந்தார்.  இவர் ஓ.பி. பணிக்கு வருகிறாரென்றால் அன்று நோயாளிகளின் வரிசை நெ. 2 ரோடுவரை நீண்டிருந்தது வரலாறு!  மருத்துவச்சான்றிதழ் தருவதற்கு பணம் வாங்குவது கிடையாது. அட்டஸ்டேஷன் கேட்டு வருபவர்களுக்கும் இல்லை என்றோ அப்புறம் வா என்றோ சொல்லாது உடனுக்குடன் கையொப்பமிட்டுகொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
          நான் உயர்நிலைப்பள்ளியில் படித்துவந்த காலத்தில் ஈஸ்னோபிலியா கம்ப்ளெயின்ட் காரணமாக அவதிபட்டு வந்த பொழுது ஆரம்பத்தில் எனது தந்தை ஒரு பிரபல சீனியர் மருத்துவரிடம் அழைத்துச்செல்வார்கள்.  அவரோ பார்த்த உடனேயே முதலில் ஒரு ஊசியை ஏற்றிவிடுவார்.  எனக்கோ ஊசி என்றாலே ஒரு பயம் – அலர்ஜி.  அப்படியிருக்கையில் முதன்முதலாக டாக்டர். ராமமூர்த்தி அவர்களிடம் அழைத்துச் சென்றபோது ஊசி குத்தாமல் மாத்திரையை மட்டுமே பெற்று வந்தது புது அனுபவமாக இருந்தது.   அதன்பின்னர் படிப்படியாக முழுமையாக குணமடைந்த எனக்கும் - எங்களின் குடும்பத்தாருக்கும் இன்றுவரை குடும்ப மருத்துவர் அவர்தான்.
          அப்போதெல்லாம் அவரது கன்ஸல்டிங் ஃபீஸ் வெறும் ஒரு ரூபாய்தான்.  பணத்தை கை நீட்டி வாங்கும் வழக்கம்  இல்லை.  மருத்துவம் பார்க்க வருவோர் அவர்களாகாவே டேபிள்மீது ஒரு ரூபாயை வைத்துவிட்டு செல்வர்.   சிலநேரம் அவற்றை பைசா நகரத்து சாய்ந்த கோபுரம் போல அடுக்கி வைத்திருப்பார்.  எவரேனும் ஐந்து அல்லது பத்து ரூபாயை மேஜைமீது வைப்பதை பார்த்தால் அந்த சாய்ந்த கோபுரத்திலிருந்து நாணயங்களை அள்ளி மீதம் கொடுத்துவிடுவார். அதில் ஒருவேளை பதினோரு ரூபாய்கூட இருக்கலாம்!! வசதி குறைவான நோயாளிகளுக்கு மருத்துவ சாம்பிள்களை இலவசமாகவே தந்துவிடுவார்.  மாணவர்கள் வந்தால் எந்த ஸ்கூல், நல்லா படிக்கிறியா, பஸ்சுக்கு பணம் வைத்திருக்கிறாயா என்று அன்புடன் விசாரிப்பார். பணம் கொடுத்து அனுப்புவார்.  வயது முதிர்ந்தவர்கள் மனக்குறையுடன் வந்தால், மருத்துவம் செய்வதுடன், “வயதானால் சிறு சிறு உபாதைகள் சிரமங்கள் இருக்கத்தான் செய்யும்” என்ற யதார்த்தத்தை பதமாக எடுத்துச் சொல்லி உணரச்செய்வார்.  தைரியமூட்டுவார். ஸ்பெசலிஸ்ட் கவனம் தேவைப்படுமென்றால், சற்றும் தயங்காது அவருக்கு நெருக்கமான ஸ்பெஷலிஸ்ட்டிற்கு கடிதம் கொடுத்து அனுப்புவார். அவர்களும் Dr. ராமமூர்த்தி அவர்களைப்போலவே திறமையானவர்களாகவும், எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைந்த பணத்தில் வைத்தியம் பார்ப்பவர்களாகவும், சேவை மனப்பான்மை கொண்டவர்களாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
          மருத்துவத்துறையில் பெருமளவிற்கு பெயர் பெற்ற பலரும் இவருடன் படித்தவர்கள், அல்லது இவருக்கு நெருக்கமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
MIOT மருத்துவமனையின் Dr. மோகன் தாஸ், அப்பல்லோ மருத்துவமனையின் பிரபல சிறுநீரக சிறப்பு மருத்துவர் Dr. M.V. மணி, பிரபல குடல் நோய் நிபுணர் Dr. ரங்கபாஷ்யம், ஆகியோர் அவர்களில் சிலர். இவர்கள் அனைவரும் அவருடன் மருத்துவம் படித்தவர்கள். புதுவை ஜிப்மர் மருத்துவமனையின் முன்னாள் இயக்குனர் Dr. சந்திரசேகர், மற்றும் உலகப் பிரபலம் பெற்றிருந்த நரம்பியல் நிபுணர். Dr. ராமமூர்த்தி முதலானோர் இவரது சீனியர்களே.

       மக்கள் திலகம் M.G.R. அவர்கள் புரூக்ளின் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டபோது மருத்துவக் குழுவில் இடம் பெற்றிருந்த மயக்க மருந்து நிபுணர்  Dr. ராஜலட்சுமி அவர்கள் நமது Dr. ராமமூர்த்தியுடன் படித்தவராவார்.

          சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் Dr. A. L. முதலியார் அவர்களின் பேரன்பினைப்பெற்றவர் நமது மருத்துவர் Dr. ராமமூர்த்தி அவர்கள்.
         
                   இவர் முதன் முதலில் மருத்துவப் பணியைத் துவக்கும் பொழுது காஞ்சிப் பெரியவர் ஒரு ஸ்டெதாஸ்கோப், ஒரு B.P. மெஷின், சிரின்ஞ், மற்றும் சுவாமிமலை முருகன் படம் பொதித்த தங்கக் காசு ஆகியவற்றை ஆசிர்வாதத்துடன் கொடுத்தனுப்பியது குறிப்பிடத்தக்கது. 

          “தாயார், தப்பனார், மகான்கள் போன்றவர்களுக்கு வணக்கம் செலுத்துங்கள். என்னைப்போன்றவர்களுக்கு வேண்டாம். தலைக்கனம் ஏறிவிடும்” என்பதை பலரிடமும் அடிக்கடிக் கூறுவார்.

          இந்த 81 வயதில் மாயவர மக்களின் அன்பினைத்தவிர இவர் வைத்துள்ள ஒரே சொத்து இவர் வசிக்கும் மருத்துவமனையுடன் சேர்ந்த வீடு மட்டுமே. மற்றபடி கார், மோட்டார் சைக்கிள் எதுவும் இல்லை. இன்றுவரை தனக்கென்று சொந்தமாக ஒரு சைக்கிளைக்கூட வைத்துக்கொள்ளவில்லை. சுமார் பத்து ஆண்டுகளாகத்தான் தரைவழித்தொலைபேசியை பயன்படுத்திவருகிறார். இன்றுவரை செல்ஃபோன் அதிகம் பயன்படுத்துவது கிடையாது. 
         
          அதிகாலை 4 மணிக்கே எழுந்து நடைப்பயிற்சி முடித்து, குளித்து, திருநீறணிந்து, தூய வெண்ணிற ஆடையுடன் 6 மணிக்குள்ளாக கிளினிக்கைத்திறந்து வைத்துவிடுவார். அவரைப்பார்த்தாலே பாதி வியாதி பறந்து ஓடிவிடும். மருத்துவக்கட்டணம் 5 ரூபாய் என்றால்,  இவர் எழுதும் மருந்துகளின் விலையோ 20லிருந்து 50 ரூபாய்க்குள் முடிந்துவிடும்.  விலை உயர்ந்த மருந்துகளை எழுதும் வழக்கம் இல்லை.  ஏழையா, பணக்காரனா, என்ன வேலை செய்கிறார், என்ன ஜாதி, என்ன மதம், அவரது செல்வாக்கு என்ன என்று எதையுமே லட்சியம் செய்யாது, வந்திருப்பவர்களுக்கு என்ன நோய் அதற்கு என்ன மருத்துவம் என்பது மட்டுமே அவரது சிந்தையில் இருக்கும். வருபவர்களின் வியாதியைக் கண்டறிந்து அதற்கான மருத்துவம் செய்வதில் இவரது வேகம் மிகவும் வியக்க வைக்கும் ஒன்றாகும். மருத்துவத்துடன் கலந்து இவர் தரும் மனிதாபிமானம் எல்லையற்றது.  வசதியற்ற ஏழை மக்களுக்கு இலவச சிகிச்சை செய்வதுடன், அவர்களிடம் சிக்கனம், பிள்ளைகளின் படிப்பு இவற்றையும் அறிவுறுத்துவார்.

                திருச்சி செயின்ட் ஜோஸப் கல்லூரியில் மெட்ரிக் படித்தபோது Dr. A. P. J. அப்துல் கலாம் அவர்களுடன் Composition எழுதியது குறிப்பிடத்தக்க விஷயம்.

      மாயவரத்தின் முன்னாள் M.L.A.க்கள் திரு. அபுல்ஹசன், திரு. தம்பி தேவேந்திரன், திரு. கிட்டப்பா ஆகியோர் இவரிடம் மருத்துவம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாது ஹவுஸ் சர்ஜனாக சென்னை மருத்துவக் கல்லூரியில் இருந்த காலத்தில் தந்தை பெரியார், ஆச்சார்யா வினோபா பாவே ஆகியோருக்கு மருத்துவம் செய்யும் வாய்ப்பினைப் பெற்றதும் பெருமைக்குரியது.
         
“நீ பெரிய மகானாக இருப்பாய். ஏழை, எளிய மக்களுக்கு உதவியாயிரு” என்று காஞ்சி மாமுனிவர், ஞானானந்த சுவாமிகள் ஆகியோரால் வாழ்த்தப் பெற்றவர்.
          
“செய்யும் தொழிலே தெய்வம்; அதில் திறமைதான் நமது செல்வம்” என்பதற்கு மகத்தான உதாரணம் இவரென்றால் அது சற்றும் மிகையில்லை!  நிறைகுடம் என்றும் தளும்புவதில்லை. அவரது துணைவியார் திருமதி. நீலா ராமமூர்த்தி அவர்களும் மிகவும் எளிமையானவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

          இந்த வயதிலும், மருத்துவம் செய்யும் நேரம் போக கிடைக்கும் சிறு சிறு இடைவெளிகளில் மருத்துவத்துறை சம்பந்தப்பட்ட நூல்களை படிப்பது இவரது வழக்கம்.

          Dr. ராமமூர்த்தி அவர்கள் விரும்பும் பாடல்கள் – 1. மூதறிஞர் ராஜாஜி அவர்கள் எழுதிய “குறை ஒன்றும் இல்லை” மற்றும் 2. பாரதியார் எழுதிய “கந்தன் கருணை வேல்” ஆகியவையாகும்.
  
          இவரது ஒரே மகன். Dr. R. சீனிவாசன் அவர்களும், ஒரு பிரபல சிறுநீரகவியல் நிபுணர். சென்னையில் பணிரிந்து வருகிறார். அவரும் சென்னையில் பணிபுரிந்தபோதும் மிகக்குறைந்த தொகையே கட்டணமாக பெற்று சேவை செய்துவருவது குறிப்பிடத்தக்கது. பாராட்டத்தக்கது.

          இந்த எனது தொகுப்பு நமது Dr. ராமமூர்த்தி அவர்கள் மாயவர மக்களுக்கும் மனித இனத்திற்கும் ஆற்றிவரும் மருத்துவத் தொண்டிற்கு, எங்கள் குடும்பத்தாரின்பால் அவர் கொண்ட பேரன்பிற்கு, நான் அவருக்கு செய்யும் சிறு மரியாதை.  பெரும்பாலான செய்திகள், பெரும்பாலானவர்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கக் கூடும். எப்படி சொன்னாலும்...A Rose is... a Rose is... a Rose!

          மருத்துவப் படிப்பினை முடிப்பதென்றால் பெருமளவிற்கு பணம் செலவு செய்ய நேரிடும் இந்த கால மருத்துவர்களுக்கு இதெல்லாம் சாத்தியமா என்ற கேள்வி எழுவது சகஜம்தான். ஆனாலும் இன்று மருத்துவம் படித்து மருத்துவராகும் இளைஞர்களில், இளைஞிகளில் ஓரிருவருக்காவது செலவு செய்த பணத்தைத் தாண்டி ஓரளவிற்கு சம்பாதித்து வசதி வாய்ப்புகள் பெற்ற பின்னர் மருத்துவ சேவைக்கு பணத்தைவிட அதிக முக்கியத்துவம் கொடுக்க முன்வந்திட சிறு தூண்டுகோலாக என்னுடைய இந்த தொகுப்பு  அமையுமென்றால், அதுவே எனது இந்த சிறுமுயற்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக கருதுவேன். 

நன்றி! வணக்கம்!! ஜெய்ஹிந்த்!

ரவிஜி @ மாயவரத்தான் எம்ஜிஆர்
Friday 2 September 2016

ம(மா)ரணம்…!ம(மா)ரணம்…!
எங்கோ, எப்பொழுதோ,
எப்படியோ, எவரையும், 
ஏதேதோ நிமித்தமென-
எதிர்கொள்ளும் மரணம்.
காலத்தின் கோலமாய்
காட்சிப் பிழை மேவிட,
நட்பிலும், உறவிலும்,
தப்பிடும் -  க(கா)ரணம்…
மரணங்கள் தாண்டியும்
தந்திடும் மா-ரணம்!
உலகைப் பிரிகையில்
வலி ம(து)றந்து போகும்.
உறவுகள் பிரிகையில்
வலி – உயிர் போகும்!
எம்.ஜி.ஆர்.
(பட உதவி - நன்றி கூகிள்)

Thursday 25 August 2016

ந(க)டப்பு…?!

ந()டப்பு…?!
மழையின் தூற(வ)லை அனுபவியுங்கள்;
வெற்றாய் நனைந்து திரும்பாதீர்கள்.
உணவின் சுவையிலே மயங்குங்கள்;
வயிற்றை மட்டுமே நிரப்பாதீர்கள்.
கவினுறு காட்சிகளை ரசியுங்கள்;
சி(நி)ந்தனையில் ஊறி ந()டக்காதீர்கள்.
தென்றலை உணர்ந்து தழுவுங்கள்;
காற்றாய் நினைத்து நழுவாதீர்கள்.
எதிரே கண்டால் புன்னகையுங்கள்;
புதிரென நினைத்து கடக்காதீர்கள்!
பணத்தை மட்டுமே ‘எண்ணா’தீர்கள்…
மனத்தை பற்றியும் நினையுங்கள்.
வாழ்க்கையை சுகித்து வாழுங்கள்
நாட்களை மட்டும் ந()டத்தாதீர்கள்!
எம்.ஜி.ஆர்...
(பட உதவி : நன்றி கூகிள்)
(முதல் அடி எடுத்துக் கொடுத்த பாப் மார்லிக்கு நன்றி)

Thursday 4 August 2016

நே(யோ)சிப்பு…!


நே(யோ)சிப்பு…!
நீங்கள் சொல்கிறீர்கள்
மழையின் மீது மோகமென்று;
ஆனால் மழை வந்தாலோ-
குடையால் போடுகிறீர் மடை!
நீங்கள் சொல்கிறீர்கள்
சூரியன் சுகம் தருவதாய்;
ஆனால் வெய்யில் வந்தாலோ
நிழல் நாடி ஒதுங்குகிறீர்கள்!
நீங்கள் சொல்கிறீர்கள்
காற்றோடு காதல் உண்டென;
ஆனால் காற்று வந்தாலோ
ஜன்னலை மூடி விடுகிறீர்கள்!
என்னையும்நேசிப்பதான
உங்களின் உச்ச வார்த்தைகள்-
அச்சம் நோக்கி செலுத்துகிறது;
அதுவும் நிராகரிப்போ என்று!!
(ரெகே பாடகர் - பாப் மார்லி)
தமிழில் – ரவிஜி…
(புகைப்படங்கள் : நன்றி கூகிள்)

Tuesday 10 May 2016

அம்மா..

அம்மா....
அள்ளிக் கொஞ்சுவதோ
உடன் பிறந்த தங்கை!
அதற்குள்ளாக ஆற்றுவது
அம்மாவில் பாதிப்பங்கை!
ரவிஜி---
(அற்புதப் பட உதவி - நண்பர் வெங்கட் குட்வா)

Saturday 16 April 2016

இறு(தீ)திப் பயணம்!இறு(தீ)திப் பயணம்!
“ஐயோ அவரா… ரொம்ப நல்ல மனுஷனாச்சே…!
வீட்டுக்கு ‘பாடி’ய எடுத்துகிட்டு வந்தாச்சா?
கண்ண ரெண்டயும் தானம் குடுத்தாச்சா…?
எத்தனை மணிக்கு எடுக்கப் போறாங்க?”
கேள்வியுறும் மனிதர்கள் ஒவ்வொருவர்க்கும்
வெவ்வேறாக இருக்கின்றன கேள்விகள்!
விபூதிப்பட்டை நடுவே ஒரு ரூபாய் பொட்டு;
சிலருக்கு கூலிங் கிளாஸ், கோட்டு-சூட்டு;
போகும் வழியதனில் வெடிக்கும் வேட்டு;
அசையும் தேரெனவே பூக்களால் பல்லக்கு;
இதுநாள் கண்டதில்லை இன்று குளிர்பெட்டி---
வாசலில் கிடத்தி சுற்றீலும் பேச்சு-வெ(வே)ட்டி!
அரைவயிறும் உண்டதில்லை-இன்று ‘ஆனந்த’பவன்
வந்ததில் பலபேர் வாசலுடன் திரும்பிச் செல்ல,
பெண்டிர் பாச(மு)சுற்றும் தெருவில் நின்றுபோகும்!
சூட்டிய மாலைகள் வழியில் உதிர்(ந்)த்துப்போகும்,
தட்டிய வரட்டி, மரம் உடைத்த கட்டையாலும்
இறுதிப் படுக்கையில் வாயில் கொஞ்சம் அரிசி;
கண்ணில் முகம் மறையும் நேரமிது ‘நீ - தரிசி’!
வாழ்க்கை முடிந்(த்)தோர்க்கு தீயில் ஒரு வேள்வி;
திரும்பும் வழிதனிலே  எழும்(ப்)பும் பல கேள்வி;
வாழ்நாள் முழுதிலும் உடுத்திடக் கொடுத்தோமா?
ஒருவேளை உணவேனும் மனதார()த் தந்தோமா?
அன்பாய் கனிவாய் அரைவார்த்தை விசாரிப்பு…?
மாந்தர்தம் தீமைகள் தீயோடு தீய்ந்து-போகும்;
பாயிலே ஓயுமுன்னே நன்மை செய்திருப்போம்;
உடலுக்கு மரியாதை இறுதியிலே செய்வதிலும்-
இருக்கும் காலமதில் இனியவை தந்திருப்போம்!
வேஷம் ஏதுமில்லா பாசம் காட்டிடுவோம்.
போனவர் வாழ்க்கையிலே பாடம் பெற்றிட்டால்-
இருக்கும் மனிதர்களின் பாதைகள் இனிதாகும்.
கண்ணீர்த் துளிகளிலே பாடம் எ()னக்கிருக்கும்;
இறுதியிலே மூட்டும் தீ எ()னக்கும் காத்திருக்கும்!
ரவிஜி---
(படங்கள் - ரவிஜி; இடம் - காசி, அரிச்சந்திரா படித்துறை)

<--ம்பும்ரு(வி)தி <-- காலப்பக்கங்கள்!<--
<--ம்பும்ரு(வி)தி - காலப்பக்கங்கள்!
என் காலப்புத்தகத்தின் பக்கங்களை
மீண்டு(ம்) நான் திருப்பிட வேண்டும்!
அஞ்சு மைல் தொலைவு தூரத்து-
மாரியம்மனை கும்பிட வேண்டி…
என் ஆத்தாவின் இடுப்பில் தொற்றி
ஆசை ஆசையாய் ஒரு பயணம்!
மேலே ‘சட்டை’ எதுவுமில்லாது-
டவுசரை மேலே இழுத்துவிட்டபடி
பலுங்கியும் கிட்டிப்புள்ளும் ஆடிய
கோட்டிக்கார கவினிறு நாட்கள்…!
மீசையுடன் ஆசையும் அரும்பிட-
கண்ணில்படும் கலர் தாவணிகளை
கட்டின்றி காதலித்த கவின் நாட்கள்…!
கல்லூரி நாட்கள் பி(மு)டித்து
பெயரின் பின்னாலொரு பட்டம்
கிட்டிய முதல் பெருமைத் தருணம்…!
வேலை கிடைத்ததாய் எனக்கு வந்த
கடிதத்தைப் பிரித்து முதலில்
படித்து நெஞ்சம் துள்ளிய நேரம்!
ஆசையாய் வாங்கிய வாக்மேனில்
முதலில் கேட்ட இசைராசாவின்
“அன்னக்கிளி உன்னைத்தேடுதே…!”
என்னையும் காதலா(ல்)ய் வரித்து
காதலின் பரிசென எனக்குக் கிட்டிய
என்றும் தித்திக்கும் முதல் முத்தம்…!
எங்கெங்கோ தேடித்தேடி ‘இவளே’தான்
என்று முடிவானதும் ‘மனைவி’க்கென
நான் வாங்கிவைத்த முதல் சேலை!
காலுதைக்கும் ரோஜாக்குவியலை
அள்ளி என் கையில் “அப்பாவப்பாரு…!”
சொல்லி என் தங்கை  கொடுத்திட
சிலிர்த்து நான் மய(ங்)க்கிய என்
செல்ல மகளின் வெல்லப் புன்னகை…!
பள்ளிச் சீருடையில் ‘அள்ளி’ச்செல்ல
உள்ளே செல்ல அடம்பிடித்து அவள்
கண்கலங்கிட்ட ‘டாட்டா’  தருணம்!
பிளஸ்டூ பரிட்சைக்கும் - ‘நீதான்
கூட்டி வந்துவிடனும்… ப்ளீஸ்பா!’ என
கழுத்தைக்கட்டி கொஞ்சிய பாசம்!
கம்ப்யூட்டர் படித்து கல்லூரி முடித்து
காலத்தே ‘பிடித்த’ வெலையில் இணைந்து
முதல் சம்பளத்தில் அவள் வாங்கி
எனக்கும் மனைவிக்குமாய் அன்பளித்த
காலத்தைக் கடக்கும் கடிகாரங்கள்…
வரும் பிரிவின் முதல் படியெனவே
வேலை நிமித்தம் என்று சொல்லி-
விசாவோடு ஏர்டிக்கெட்டுடன் என் மகள்…
முதல் பிரிவினை ஏற்றிட வெறுத்து-
மகிழ்ச்சிப் பக்கங்களைத் தாண்ட மறுத்து,
காலுதைத்து சிணுங்கும்  சிறுபிள்ளையாய்
முகவரி தேடிச் செல்லும் கடிதமென
முதல்-வரி நாடிச் சென்று ப(பி)டிக்கும் …
முதுமையை மறுக்கும் - என் மனம்!
ரவிஜி…