Friday 2 October 2015

சுத்தமான சுற்று(ம்) சூ(சு)ழல் வாழ்க்கை!

சுத்தமான சுற்று(ம்) சூ(சு)ழல் வாழ்க்கை!
முன்னுரை:-
“சுத்தம் சோறு போடும்” என்பது பழமொழி! சுத்தமாயில்லாத மனிதனின் அருகில் எவரும் நெருங்குவதில்லை அவனை நெருங்கவிடுவதுமில்லை! சுத்தமற்ற இடமென்றால் மனிதர்கள் எவருமே அங்கே செல்லவே விரும்புவதில்லை. ஒரு இடத்தை நீங்கள் சுத்தம் செய்து வைத்தால் அது எவ்வளவு நேரம் சுத்தமாக இருக்கும்? சர்சைக்குரிய கேள்வி! அது அங்கே வசிக்கும் மனிதர்களின் மனத்தையும் குணத்தையும் பொறுத்தது! ஆனால் ஒவ்வொருவருக்கும் இந்த விழிப்புணர்வு ஏற்பட்டுவிட்டால் சுற்றுச் சூழல் முற்றுமாகப் பாதுகாக்கப்படும் அல்லவா! எனவேதான் இந்த தலைப்பே அவசியமான ஒன்றாகிவிடுகிறது!

குப்பைக்கு முறையான ‘குட்’பை!
உலகென்றால் உண்டு பல நாடுகள்! நாடுகள் ஒவ்வொன்றிலும் உண்டு பல வீடுகள்! ஒவ்வொரு வீட்டிலும் உண்டு மனிதர்கள்! அவரவர் தேவைகள் தீர தினமும் சேர்ந்திடும் குப்பைகள்! அவற்றை முறையாக அப்புறப்படுத்துகிறோமா? நம் வீட்டிலேயே இரண்டு குப்பைத்தொட்டிகள் தேவை! ஒன்று காய்கறி, பழத்தோல்கள், வாடிய பூக்கள் முதலான மக்கும் குப்பைகளுக்கு. மற்றது மக்காத குப்பைகளுக்கு. மக்கும் குப்பைகளை ஒரு குழிதோண்டி அதில் தினமும் போடுவைத்திருப்பதன் மூலம் இயற்கை உரம் உருவாகும்! முட்டை ஓடுகளை ரோஜாப்பதியனுக்கு உரமாக இடலாம்! மக்காத குப்பைகளை மட்டும்  சாலை ஒரத்துக் குப்பைத்தொட்டியிலோ அல்லது காலை நேரத்தில் தெருவிற்கு வரும் குப்பை வண்டியிலோ சேர்த்துவிடலாம். அதேபோல அவரவரும் தத்தம் வீட்டுக்கு அருகினில் ஓடும் சாக்கடைகளில் நீர் தெங்காமல் சுத்தமாகப் பராமரிப்பதோடு குப்பைகளை தெருவில் வீசி எறியாமல் இருந்தாலே தெருவின் சுத்தம் குறித்த விழிப்புணர்வினை நோக்கி முதல் அடி எடுத்துவைக்கிறோம் என்று பொருள்.
பாலிதீனை ஆக்குவோம் ‘காலி’தீன்!
வலைப்பூவில் இந்த கட்டுரையை வாசித்துக்கொண்டிருக்கும் நீங்கள் நிலக்கடலை அல்லது பட்டாணியை கொறித்துக் கொண்டிருக்கலாம்! அதனை சுமந்திருப்பது காகிதக் கூம்பு என்றால் உங்களுக்கு ஒரு சபாஷ்! பிளாஸ்டிக் கவர் என்றால் நீங்கள் விழித்துக்கொள்ள வேண்டும்! மளிகைப்பொருட்கள், காய்கறிகள், உணவகங்களில் சாம்பார், ரசம், சட்னி, பொறியல் என்று எதனைக் கட்டித்தரவும் பிளாஸ்டிக் பைகளே பயன்படுத்தப்படுகின்றன! அதுவும் மிகவும் மெலிதான எளிதில் மக்காத தன்மை கொண்டவையாக உள்ளதுதான் கொடுமை!அவ்வளவு ஏன்? குளிர் பானங்கள், குடிநீர் இவற்றைக்கூட பிளாஸ்டிக் கவர்களிலும், பிளாஸ்டிக் பாட்டில்களிலும்தானே அடைக்கப்படுகின்றன? இவை நமது உடலின் உள்ளுறுப்புகளுக்கு ஊறுவிளைவிப்பதோடு சுற்றுச்சூழலையும் குட்டிச்சுவராக்குவதில் பெரும்பங்கு வகிக்கின்றன என்றால் அது மிகையில்லை! ஒரு முக்கிய நகரின் பிரதானமான பகுதியில் ஒரு மழைக்காலத்தில் சாலையெங்கும் முழங்காலுக்கும் மேலாக தண்ணீர் தேங்கி சாலைப்போக்குவரத்திற்கு பேரிடைஞ்சலாக அமைந்தது! தண்ணீர் வடிந்ததும் பார்த்ததில் வடிகாலின் பெரும்பகுதியை அடைத்திருந்தது பிளாஸ்டிக் பாட்டில்களும், பாலிதீன் கவர்களுமே! நாம் என்ன செய்யலாம்? கடைத்தெருவிற்குக் கிளம்பும்போதெல்லாம் தவறாது ஒரு சணல்பையை அல்லது துணிப்பையை எடுத்துச் செல்வது அவசியம்! பாலிதீன் கவர்களை தவிர்க்கலாம்! தவிர்க்க இயலாமல் வாங்கிக்கொள்ளும் பைகளை மடித்து வைத்திருந்து கடைகாரரிடமே திருப்பித் தந்துவிடலாம்! பாலிதீன் பைகளை வாங்குவதை இதன் மூலம் மிகவும் குறைக்கலாம்! கேரளா முதலான இந்தியாவின் சில மாநிலங்களிலேயே பாலிதீன் கவர்கள் தடை செய்யப்பட்டிருப்பதோடு மக்களும் விழிப்புணர்வோடு அதன் பயன்பாட்டினைத்  தவிர்த்துவருவது மிகவும் பாராட்டத்தக்கது! நாமும் பின்பற்றத் தக்கது! முயற்சிப்போம்! நாமும் செய்வோம்!
 மனதை மருட்டும் மருத்துவக் கழிவுகள்!
சுத்தம் மற்றும் சுகாதாரக்குறைபாடுகளாலேயே பல நோய்கள் மனிதர்களுக்கு ஏற்படுகின்றன! அந்த சூழலில் மருத்துவமனைகள் அவசியமாகிவிடுகின்றன. மருத்துவம் பார்ப்பதால் ஏற்படும் மருத்துவக்கழிவுகளான பயன்படுத்தப்பட்ட ஊசிகள், கட்டு பிரிக்கப்பட்ட துணிகள், கையுறைகள், அறுவை சிகிச்சையால் ஏற்படும் மற்ற கழிவுகள் முதலானவற்றை முறைப்படி அப்புறப்படுத்தவேண்டும்.  மற்ற குப்பைகளுடன் அவற்றை கலத்தல் கூடாது.  பல நல்ல மருத்துவமனைகள் அரசாங்கத்தின் சட்டம் மற்றும் வழிகாட்டுதல்படி இதில் நடவடிக்கை எடுக்கின்றன. மற்ற மருத்துவமனை உரிமையாளர்கள் அதனை கடைபிடிக்க அறிவுறுத்த வேண்டும்.
 புகை நமக்குப் பகை!
புகை பல ரூபங்களிலும் பகையாகவே இருக்கிறது! முதலாவதாக சிகரெட் புகை. சிகரெட் புகை புகைபிடிப்பவர்களைவிட அதனை சுவாசிக்க நேரும் மனிதர்களுக்கே அதிகம் பாதிப்பு ஏற்படுத்துகிறது. எனவேதான் பொது இடங்களில் புகை பிடிப்பதனை அரசாங்கம் தடை செய்துள்ளது. உடல் நலன் கருதியும், சுற்றுச்சூழல் கருதியும் புகைபிடித்தலை ஒட்டு மொத்தமாகவோ, படிப்படியாகவோ நிறுத்திவிடவேண்டும் அல்லது பொதுஇடங்களில் புகைப்பதையாவது தவிர்க்கவேண்டும். அடுத்ததாக வாகனப்புகை! நம்மில் வாகனங்கள் பயன்படுத்தாதவர்கள் எவருமே இல்லை எனலாம்! சில சிறுசிறு விஷயங்களில் கவனம் செலுத்தினாலே வாகனப்புகையால் ஏற்படும் பாதிப்பினை தவிர்க்கலாம். வாகனங்களில் ஆயில் மாற்றுதலை சரியான கால இடைவேளையில் மேற்கொள்ளவேண்டும். சிக்னல்களில் வாகனங்களின் இஞ்சின் இயக்கத்தை நிறுத்துவதன் மூலம் புகையை கட்டுப்படுத்தலாம்.  தொழிற்பேட்டைகளில்  சரியான புகைபொக்கிகள் அமைத்தல், மரங்கள் வளர்த்தல், மற்றும் அரசின் வழிகாட்டுதல்களைப் கடைபிடிப்பதன்மூலம் பாதிப்புகளைக்குறைக்கலாம்! எல்லாவற்றுக்கும் மேலாக நாம் பயன்படுத்தும் வாசனை திரவியங்கள் ஓசோன் படலத்தில் ஓட்டைபோடாதவையாக இருக்கவேண்டும். நாம் பயன்படுத்தும் குளிர்சாதனங்களில் நிரப்பப்படும் வாயுவும் அனுமதிக்கப்பட்டதாக ஓசோன் படல ஓட்டையை தவிர்ப்பதாக இருக்கவேண்டும்! பகையான புகையை நாம் கட்டுக்குள் வைப்போம்!
 சத்தம் இல்லாத உலகம் செய்வோம்!
ஒலியில்லாத உலகம் ஊமையாகிப்போகும்! ஆனால் சந்தம் இல்லாத சத்தம்? பேருந்து, லாரிகள் எழுப்பும் அளவுக்கு அதிகமான ஹார்ன் சத்தம் குறைக்கப்படவேண்டும்.
தீபாவளி போன்ற பண்டிகைகளின்போது கூட குறைவான சத்தம் எழுப்பும் பட்டாசுகளை பயன்படுத்தலாம்! அதுவும் மாலை மற்றும் முன்னிரவு வேளையில் மட்டும் அரசு அனுமதிக்கும் கால இடைவெளிக்குள் மட்டும்!  திருமணம், காதுகுத்து, கோயில் திருவிழா, என்றபெயரில் மிகவும்
அதிகமாக ஒலியெழுப்பும் ஒலிபெருக்கிகள் நம் காதுகளைப்பதம் பார்த்துவிடுகின்றன! இதய நோயாளிகளுக்கு இதனால் ஏற்படும் இன்னலோ – சொல்லவே வேண்டாம்! இதுபோதாதென்று வெடிகள் வாணவேடிக்கைகள் வேறு! இவை ஏழை மற்றும் நடுத்தர மக்களின் பட்ஜெட்டை பதம் பார்ப்பதோடு, அவை எழுப்பும் அளவிற்கு அதிகமான சத்தமும் புகையும் சுற்றுச் சூழலை முற்றிலுமாக பாதிப்பதை மறுப்பதற்கில்லை! இதைவிடக் கொடுமை இந்த வேட்டுச்சத்தம் இறுதி ஊர்வலங்களில் தவிர்க்கமுடியாமல் இருப்பதுதான்! இறந்தவர் இருக்கும்வரை மூன்றுவேளை சோறாவது குறையில்லாமல் கிடைத்ததா என்ற கேள்விக்கு பெரும்பாலும் பதில் இருப்பதில்லை! முதல்கட்டமாக சத்தத்தைக் குறைபோம். பின்னர் முடிந்தவரை அவற்றைத் தவிர்ப்போம்!
 புவிக்கு வேண்டாம் அரிதாரம்!
இயற்கை அழகுக்கு ஈடு இணையில்லை. இது மனிதர்களோடு புவிக்கும் பொருந்தும்.  சாயப்பட்டறைக் கழிவுகள் பல இடங்களில் சரியானபடி வெளியேற்றப்படுகின்றதா, அப்புறப்படுத்தப்படுகிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இதனால் மக்களுக்கு தோல் நோய்கள், மற்றம் பல பாதிப்புகள் ஏற்படுவதோடு இது மனிதனின் வாழ்வாதாரமான நிலத்தடி நீரினையும் பாதித்துவிடுவதுதான் கொடுமை. இத்தோடு வினாயகர் சதுர்த்தி கொண்டாடும்- பொழுது வாங்கப்படும் ஆடம்பர வண்ண சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்படும்போதும் இதேபோன்ற நீராதார பாதிப்புகளை ஓரளவிற்கேனும் ஏற்படுத்துகிறது. ஆனால் சுத்தகளிமண்ணால் செய்யப்படும் சிலைகளால் இத்தகைய பாதிப்புகள் ஏற்படுவதில்லை! இதனை நாம் கருத்தில் கொள்வது நம் அனைவருக்கும் நலம் பயக்கும். எனவே அத்தகைய செயற்கை வண்ணங்களால் பூமிக்கு வேண்டாம் ஒரு அரிதாரம்.
 காடுகளின்றி வீடுகளில்லை!
காடு விலங்குகள் வாழும் நாடு! நாடு மனிதர்கள் வசிக்கும் காடு! சமீபகாலமாக காடுகள் அழிப்பு துவங்கியிருப்பது கவலை அளிக்கும் விஷயம்தான்! சந்தன மரம், செம்மரம் இவை பணத்துக்காக அழிக்கப்பட்டுவருகின்றன. மரங்கள் மனித இனத்திற்கு மழைதரும் வரங்கள்! மரங்களின்றி மழையில்லை! மனிதர்கள் வாழும் இடங்களில் ஓரளவிற்குமேல் மரங்களை வளர்க்க இயலாது! எனவேதான் காடுகளை பாதுகாப்பது மிகமிக முக்கியமான ஒன்றாகிறது! நீரின்றி அமையாது இவ்வுலகு! எனவே மழையில் கிடைக்கும் நீரையாவது சேமிக்கும் வழிமுறைகளை முறையாகக் கடைபிடிப்போம். விலங்குகளின் நடமாட்டப்பாதையில் மனிதனின் ஆக்கிரமிப்பு துவங்கினால் அவை மனிதர்கள் வாழும் இடங்களைக் கடந்து செல்ல நேரிடுகிறது! அருந்த நீரில்லாத சமயங்களில் மனிதர்கள் வசிக்கும் இடங்களுக்கு காட்டு மிருகங்கள் வரநேரிடுகிறது! எனவே காடுகளை காப்பதும் மனித இனத்திற்கு அவசியமான ஒன்றாகும்!
 ‘சுத்தமான பாரதம்’!
நம் பாரதப் பிரதமர் அறிவித்திருக்கும் ஸ்வச் பாரத் ஒரு மிக நல்ல திட்டம் என்றே சொல்லவேண்டும்! இந்த தலைப்பிற்கு மிகவும் பொருத்தமான திட்டம்! அரசியலுக்கு அப்பாற்பட்டு மனித இனத்தின்பால் அக்கறை உள்ள அனைவரும் அதற்கான பங்கினை, செலுத்தலாம். நம் நாட்டிற்கான கடமையை, வீட்டிற்கான கடமையை நிறைவேற்றலாம். நம் வீட்டையும், அலுவலகத்தையும், நாட்டையும் தூய்மைப் படுத்தலாம், சுத்தமாக வைத்திருக்கலாம்!  திறந்தவெளிகளை கழிவறைகளாகப் பயன்படுத்தும் மனிதர்களுக்கு கழிவறைகளை கட்டித்தர அரசாங்கத்தோடு இணைந்து பண வசதி கொண்டவர்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்! பல இடங்களில் சமூக வலை தளங்கள் இதற்குப் பயன்படுவதும் பாராட்டுக்குரியது!
 முடிவுரை!
ஒவ்வொருவரும் தன் வீட்டின் வாசலை சுத்தம் செய்தால், தெரு தானாகவே சுத்தமாகிவிடும்” என்று ஒரு அரேபியப் பழமொழி. சுற்றுச் சூழல் என்பது வெற்றுச் சூழல் அல்ல. மக்களின் மீதும் நம் நாட்டின் மீதும் வேண்டும் பற்றுச் சூழல். நம்முடைய முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற உன்னதமான வாழ்க்கை அமைப்பை அதற்கான சுற்றுப்புறச் சூழலை நமது அடுத்த தலைமுறையினருக்கு, சந்ததியினருக்கு கொடுத்துச் செல்வது நமது தலையாய கடமைகளில் ஒன்றாகும். அதற்குத் தேவை மக்களிடையே விழிப்புணர்வு. அரசியலுக்கு அப்பாற்பட்ட மாமனிதராம் காந்தி பிறந்த இந்த நன்னாளில், கர்மவீரர் என்று புகழப்பட்ட காமராஜர் அவர்கள் தம் வாழ்வை நிறைவு செய்த இந்நாளில், மனித இனத்திற்கு சுற்றுச் சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்த எனக்கு கிடைத்த பொன்னான ஒரு வாய்ப்புதான் இந்த கட்டுரை! இதில் தொகுத்தளிக்கப்பட்ட செய்திகள் ஒரே ஒருவருக்காவது,  உணர்வுப்பூர்வமாக ஒரே ஒரு விஷயத்தையாவது கடைபிடிக்க விழிப்புணர்வினை ஏற்படுத்துமானால் அதுவே இந்த வாய்ப்பிற்குக் கிடைத்த பெரும் வெற்றியாகக் கொள்ளலாம்!
வாருங்கள் நாம் அனைவரும் சேர்ந்து துவங்கலாம்!
நன்றி! வணக்கம்!!
ஜெய் ஹிந்த்!!!
 அன்புடன் ரவிஜி--- 
(தேசப்பிதா காந்தி அவர்களின் பிறந்த தினமும்,  பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் நி(றை)னைவு தினமுமான அன்று வலைப்பதிவர் சந்திப்பு 2015 ஒட்டிய போட்டிக்கான இந்த கட்டுரையை பிரத்தியேகமாக எழுதி வெளியிடுவதில் பேருவகை கொள்கிறேன்)
(புகைப்படங்கள் : நன்றி கூகிள்)