Friday 7 November 2014

விஜிகே-12 வெண்மை சற்றே உண்மை! விமர்சனம்!!!


விஜிகே-12 உண்மை சற்றே வெண்மை! விமர்சனம்!!!

சொல்லாத சொல்லுக்கு - விலையேதுமில்லை! செல்லாத விமர்சனத்திற்கு – பரிசேதுமில்லை!!! (ஆனால் அதன் பின்னர் கிடைத்ததோ - பெரும் பொக்கிஷம்!!!)
     இந்த விமர்சனப் போட்டியைப்பற்றிக் கேள்விப்பட்டு நான் எழுதிய முதல் விமர்சனம்! நண்பர் சொன்ன இ-மெயில் ஐடியை அரைகுறையாகக் காதில் வாங்கிக்கொண்டு valambal@gmail.com-ற்கு பதிலாக   balambal@gmail.com அனுப்பிவிட்டேன்! பின்னர் வாத்தியாருக்கு சரியான மெயில் ஐடிக்கு மீண்டும் அனுப்பி அவரது கருத்தைக்கேட்டேன்! மிகவும் பெருந்தன்மையுடன் அவரது கருத்தோடு அன்பையும் உற்சாகத்தையும் சேர்த்து பதிலளித்திருந்தார்! விஜிகே அவர்களின் உள்ளம் உண்மை முற்றிலும் வெண்மை என்பது எனக்குப் புரிந்தது!! அடுத்த விஜிகே-13ல் மூன்றாம் பரிசோடு எனது வெற்றிக்கணக்கு துவங்கியது! பின்னர் விஜிகே என்ற ‘மா’மனிதரின் மனதில் இடம் கிடைத்து ‘இதயக்கனி’யாகவும் பதவி உயர்வு பெற்றது தனிக்கதை-தொடர்கதை! நான் எழுதிய முதல் விமர்சனம் இதோ - வார்த்தைக்கு வார்த்தை அப்படியே தந்துள்ளேன்! இதற்கு நடுவர் அவர்களும் கருத்திட்டால் மிகவும் மகிழ்வேன்!
என்றும் அன்புடன்,
உங்கள் எம்ஜிஆர்!!!

VGK REFERENCE NO.12.
திரு வை.கோ. அவர்களின் “ உண்மை சற்றே வெண்மை” சிறுகதைக்கான விமர்சனம்.
தூய்மை, உண்மை, என்றாலே வெண்மைதான் அடையாளப்படுத்தும் நிறமாக இருந்து வருகிறது. “சற்றே வெண்மை” என்ற வார்த்தைகள் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி கதைக்குள் வாசகனை இழுத்துச்செல்கிறது.
முன்னிலை, படர்க்கை அதிகமின்றி தன்னிலையிலேயே கதையை எழுதியிருப்பது கதாநாயகியின் உணர்வுகளை அழுத்தமாக பதிவு செய்கிறது. பசுக்கள் மற்றும் கன்றுகளை அந்தக் குடும்பம் பராமரிக்கும் விதத்திலிருந்தும் வாயில்லா ஜீவன்களையும் குடும்பத்தின் உறுப்பினர்களாகவே கருதுவதும் பாசமுள்ள ஜீவகாருண்ய சிந்தனையுள்ள மனிதர்களாக அந்த குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் “கோமாதா எங்கள் குலமாதா” என்று இருப்பதை வெளிச்சம் போட்டுக்காட்டுவதாக அமைகிறது. பசுக்களே குடும்பத்தின் வருமானத்திற்கு வழி செய்வதாக வாழ்வாதரத்திற்கு காரணமாக இருந்தாலும் கன்றுகள் குடித்து எஞ்சிய பாலைக்கொண்டே வருமானத்திற்கு வழிவகை செய்துகொள்வது கன்றுகளையும் மகளைப்போலவே கருதுவதை ஆழத்துடன் வெளிப்படுத்துகிறது.
மகளுக்குத் தேவையான நகைகள், பணம் என்று எல்லாவற்றையும் சேமித்துவைத்தும்கூட சாதகம் - சாதகமின்றிப் போனதாலும் சில குறைகளாலும் திருமணம் தள்ளிப்போகின்ற நிலை-
இதற்கிடையில், ஓரிரு பசுக்களே இருந்த என் வீட்டு மாட்டுத்தொழுவத்தில் பல பசுமாடுகள் புதியதாக வந்து, சுமார் நாலு மாடுகளுக்கு பிரஸவங்கள் நிகழ்ந்து இன்று ஆறு பசுக்களும், எட்டு கன்றுக்குட்டிகளுமாக ஆகியுள்ளன.”
என்ற வரிகளின் மூலமாக பசுக்களுக்கும்கூட குடும்பம் விருத்தியான நிலையும், மகளுக்கு ஏற்பட்ட தேக்கமும் வருத்தத்துடன் கோடிட்டுக்காட்டப்பட்டுள்ளது. மேலும் மகளின் வளர்ச்சியோடு பசுக்களும் கன்றுகளுடன் சேர்ந்த தந்தையின் பொருளாதார வளர்ச்சியும் ஒரு சினிமா இயக்குநரின் திரைக்கதை முத்திரையோடு எழுதப்பட்டுள்ளது.

ஒரு சிறிய பசுமாட்டுப் பண்ணை நடத்துபவரின் பெண் தானே! பெரியதாக என்ன சீர் செலுத்தி செய்து விடப்போகிறார்கள்!” என்ற எண்ணமாகக்கூட இருக்கலாம் என் திருமணம் தடைபடுவதற்கு.” என்ற வரிகள் என்னதான் பொருளாதாரத்தில் உயர்ந்து நின்றாலும் குடும்பத்தலைவரின் வேலை திருமணச் சந்தையில் முக்கியமான ஒன்றாகக்கருதப்படுவதை எடுத்துச்சொல்கிறது.
ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் பண்ணு” என்ற உலக வழக்கிற்கு எதிராக உண்மையில் ஒரு பொய்யும் சொல்ல விரும்பாத குடும்பம் - அற்புதம். கதாநாயகியின் பாத்திரப்படைப்பு முத்தாய்ப்பு. உண்மை சொல்லும் காரணத்தாலேயே திருமணத்தடை ஏற்படுவது “வெண்ணிறப் புள்ளியே இவளது வாழ்க்கையில் ஒரு கரும்புள்ளியாய் உறுத்துவது –

உண்மையை இப்போது மறைத்துவிட்டுபிறகு இந்த ஒரு மிகச்சிறிய வெண்மைப் பிரச்சனையால்என் இல்வாழ்க்கை கருமையாகி விடக்கூடாதே என்று மிகவும் கவலைப்படுகிறோம்”
என்ற வரிகள் மூலமாக பெண்ணினத்தின் குமுறலாகவே வெளிப்படுகிறது. ஒரு ஐந்தறிவு ஜீவனால் உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடிவதோடு அதற்கு வடிகாலும் ஏற்படுவது யதார்த்தமாக நிகழும்போது அழகும் குணமும் நிறைந்து நல்ல குடும்பத்தில் பிறந்து வளர்ந்தும் திருமணத்திற்கு ஏங்கி நிற்கும் அவல நிலை கதாநாயகிக்கு ஏற்படுவது வாசகனுக்கு கதாசிரியர்மீது கோபத்தையே உண்டுபண்ணக்கூடும்.
ஆதிமனிதனிடமிருந்து பல படிகள் நாம் பரிணாம வளர்ச்சிபெற்று வந்துவிட்ட சூழ்நிலையிலும் நாகரீகம் என்ற பெயரில் ஆடைகள் அணிந்து என் உடலையும்அந்தக்குறையையும் நான் மறைக்க வேண்டியுள்ளது”
என்ற வரிகளின் குமுறல் ஒரு சிறியவெண்புள்ளி எந்த அளவிற்கு அப்பெண்ணை நொந்துபோகச் செய்துள்ளது என்பதையும் அதுவே பசுவிற்கு அழகோடு சேர்ந்து அதன் விலையையும் அதிகரிப்பதும் கோடிட்டுக்காட்டுகிறது.
நானும் ஒரு பெண் என்ற திரைப்படத்து கதாநாயகியின் மனநிலைக்கு நம் கதாநாயகியின் குமுறும் மனநிலை எள்ளளவும் குறைந்ததில்லை! அதில் கருப்பு இதில் வெண்மை!

முடிவாக, ஏற்கனவே பிறந்து வளர்ந்திருக்கும் இப்பெண்ணின் உடலில் காலம் இட்ட வெள்ளைப்புள்ளியைவிட அவளுக்கும் அவளின் குடும்பத்தார்க்கும் இருக்கும் வெ()ண்மை உள்ளத்தை உணர்ந்து அவளை மகிழ்வுடன் மணக்க முன்வரும் அந்த மனிதன் விரைவிலேயே அக்குடும்பத்தாரின் கண்ணில் படவேண்டும் என்ற உணர்வுடனேயே வேண்டுதலுடனேயே வாசகன் கதையைப் படித்து முடிக்கிறான்.
அருமையான கதைக்கரு, கதைத்தளம், மற்றும் பாத்திரப்படைப்புகள். விழிப்புணர்வைத்தூண்டும் கதை. வாழ்த்துக்கள்!

வாத்தியார் கொடுத்த விருதுகள்!!!


வாத்தியார் கொடுத்த விருதுகள்!!!
சிகரம் தொட்ட பதிவாளர், பதிவுத் திலகம், (Hit rate சும்மா எகிறிடுச்சே!!!) மதிப்பிற்கும், பிரியத்திற்கும் உரிய எனதருமை வாத்தியார் திரு.வைகோ அவர்கள் 2014 துவக்கத்தில் ஆரம்பித்த சிறுகதை விமர்சனப் போட்டியை எத்தகைய எதிர் விமர்சனத்திற்கும் இடமின்றி மிகவும் வெற்றிகரமாக நடத்தி முடித்து வெற்றிவிழா நடத்திக்கொண்டிருக்கும் மாபெரும் சாதனைக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் பெருமகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன்! ஏதோ இந்தப் போட்டியை நானே நடத்தி முடித்ததுபோல ஒரு பெரு மகிழ்ச்சி எனக்குள்! அப்படி ஒரு நெருக்கத்தினை, (இதுவரை நேரில் பார்த்திராதபோதும்) மனதளவில் என்னிடம் ஏற்படுத்திவிட்டார்! கூட்டத்துல எட்டிப் பாக்கப்போனவனையே புடிச்சு மாப்பிள்ளையாக்கி மணையில உக்காரவச்ச கதையா VGK-13ல் விமர்சனப்போட்டிக்குள்ளார எட்டிப்பாத்து  நடுப்புற கொஞ்சம் (வலை)பக்கத்த காணும்கிறமாதிரி (எந்த காரணமாக இருந்தாலும்) எஸ்கேப் ஆகிவிட்டஎனக்கு(ம்) இரண்டு விருதுகள் கொடுத்துள்ளார்! இந்த மாபெரும் அங்கீகாரத்திற்கு எனது தலைவணங்கி இந்தப்பதிவில் எனது நென்சார்ந்த நன்றியை மீண்டும் மீண்டும் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்! என்னோடு விருது பெற்ற சக பதிவர்களுக்கும் எனது மனம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
1. எட்டு முறைக்கு மேலாக பரிசு வென்றவர்களுக்கான கீதா விருதில் நான்காம் இடம் அளிக்கப்பட்டதற்கான அறிவிப்பு இணைப்பு இதோ!

  1. நான்கு முறை ஹாட்ரிக் வென்றதற்கான ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி  விருதில் மூன்றாம் இடம் வழங்கப் பட்டதற்கான அறிவிற்பிற்குரிய இணைப்பு இதோ!
இந்த மாபெரும் வாய்ப்பினை நல்கிய திரு. வைகோ மற்றும் நடுவர் ஐயா திரு. ஜிவி அவர்களுக்கும் எனது நன்றிகள்! ஒவ்வொரு நிலையிலும் ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்தி என்னை வெளிக்கொணர்ந்த விஜிகே வாத்யாரையே இந்த விருதுகள் இரண்டும் உண்மையில் சேரும்!
என்றென்றும் அன்புடன்,
உங்கள் அன்பு,
 எம்ஜிஆர்---

Saturday 18 October 2014

ப(க)ட்டுச் சேலை?!


ப()ட்டுச் சேலை?!
சிறகை விரித்துப் பறக்கும்-
‘பருவம்’ மாறும் நிலைக்கென
‘மே(நூ)லாடை நான் அணிய;
உந்தன் ‘பட்டு’ப் பருவ மகள்
ப()ட்டாக அணிந்திடவே
என்னுயிர் தான் பிரித்து
நானணிந்த நூல் திரித்து
நெய்வதுவோ ஒரு சேலை?
ரவிஜி---
(பட உதவி - நன்றி கூகிள்)

Thursday 16 October 2014

கா(ன)தலில் ‘வரி’த்’தேன்’!


கா()தலில் ‘வரி’த்’தேன்’!
தூய வெள்ளைக் காகிதமாய்
இருந்திட்ட உந்தன் நிஜம்!
'கண்ட' வாலைக் க(பெ)ண்கள்
உன்மேல் பதித்துச் சென்ற
தேன் கா()தல் பாவரிகள்!
என் விழிகளில் தேடியுன்னை
வரி’களினூடே ப(பி)டித்தேன்
உந்தன் சுயம் புரிந்த பின்னே
‘என்னவன்’ என வ()ரித்தேன்!
ரவிஜி---
(பட உதவி : நன்றி கூகிள்)

Friday 26 September 2014

‘கடந்த’ காலம்!

கடந்த காலம்!
குளத்தில் விசிறிய
குசும்புக் கல்லென
கலங்கச் செய்திடும்
துன்பம் எல்லாமே
துணிந்து எதிர்கொள்ள
தோற்ற(த்)தில் சிறிதாகி
காலத்தின் ஓட்டத்தில்
கரைந்து போகும்!
எ()துவும் இங்கே-
கடந்து போகும்!
எம்ஜிஆர்---
(பட உதவி - நன்றி கூகிள்)

Saturday 20 September 2014

தேடல்!


தேடல்!
எந்தன் சுயம்
காணும் விருப்பத்தில்
எனது தேடல்கள்--!
நிழலை
கண்ணுற்றேன்!
நிஜத்தினில்-
எப்போது…?
(ஆக்கமும், புகைப்படமும்
புகைப்படத்திலும்எம்ஜிஆர்)
(வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்றிருந்த நாட்களில் பதிவிட்டது)

உரிமை!


உரிமை!
உளுத்துப்போன
‘நிலை’ ஆனாலும்
உடைந்துபோன
ஜன்னல் ஆனாலும்
பூட்டிய பூட்டு
எடுத்தியம்பும்
மிஞ்சிய வீட்டின்
‘பத்திர’ நிலை!
 (ஆக்கம் & புகைப்படம் ரவிஜி---)
(எனது பள்ளிக்கூட நண்பனின் குடியிருந்த வீடு! அவன் குடும்பத்தோடு இடம் பெயர்ந்து சென்றுவிட்டான்! வீடு காரை பெயர்ந்துகிடக்கிறது! பின் பக்கம் குடிமகன்கள் ஒதுங்கும் இடமாகிவிட்டது) 

Tuesday 16 September 2014

அப்பாவின் – ‘அம்மா!’…அப்பாவின் – ‘அம்மா!’…
அவள் மூச்சில் ஊதிக் கட்டி வைத்த
பலூனை ‘குத்தி’விட்டானென்று
அறியாச் சிறுவனிடம் காழ்ப்பு…!
அவள் முத்தமிட்ட தடமென்று
மூன்று நாளான பின்னும்
மழித்திடாத அவன் கன்னம்….!
அவள் முகம் துடைத்த காகிதம்
ஆயிரம் ரூபாய் ப(ம)ணமெனவே
அவன் பர்சினுள் பத்திரமாய்….!
அவன் அம்மாவின் அழகு ஆரம்
அணிந்து இதழோரம் ‘அழகு’
காட்டிய அவன் தங்(கை)க முகம்….!
அப்ப்ப்……பா என்று அரவணைத்து
அவள் கொஞ்சிய வார்த்தைகளின்
அசரீரியாய் ஒலிக்கும் அவன்  காதில்….!!
அவன் அம்மா விட்டுக்கொடுத்த இடம்…..
அதில் அவள் பதித்திட்ட பாசத்தடம்….!
அவள் விட்டுச் செல்லும் வெற்றிடம்…???
மொட்டவிழ்ந்து ‘மணக்கும்’ ரோஜா
சேரிடம் சென்று சேர்ந்திருக்கும்.
முட்கள் சுமந்து நிற்கும் வேர்கள்-
‘காய்ந்து’ வக்கற்று சோர்ந்திருக்கும்…….!
MGR…
(எனது நண்பர் தனது ஒரே மகளைத் திருமணம் செய்து கொடுத்தபின்னர் சில நாட்கள் கழித்து நான் அவரைச் சந்தித்த போது “மகள் எப்படி இருக்கிறாள்” என்ற என் கெள்விக்கு பிரிவின் ஆற்றாமை தாளாது நடு ரோடென்றும் பாராது தெம்பி அழுத பின் “நல்லா  இருக்கா!” என்று கண்ணீருக்கிடையேயான புன்னகையுடன் சொன்ன கண்ணனுக்காக இந்தக் கவிதை)
(வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்றிருந்தபோது பதிவிட்ட கவிதை) 
(படங்கள் : நன்றி கூகிள்)

Saturday 13 September 2014

எ(ஏ)ன் காதலே…?!


எ()ன் காதலே…?!
நீ வெட்கம் கொண்டால்
புது ரோஜாக்களும் – நாணி
தடுமாறித் தன் தலை குனியும்.
உன் புன்னகை மிளிர்ந்திட்டால்
மொட்டவிழும் முல்லைகளும்
புறமுதுகிட்டுத் தோற்றோடும்!
உன் கண்கள் தாம் அசைந்தால்
வண்டுகளும் தன் இனமென்று
அருகே வந்து சுற்றி மொய்க்கும்.
உன் துவளும் இடை கண்டு
‘உடுக்கை’யும் அயர்ந்துபோய்
படுக்கையில் ஓய்ந்து வீழும்.
நீ தளிர் நடை நடந்தாலோ
அன்னப் பறவையும் சற்றே
அசந்து அசைவற்று நிற்கும்.
உன் விரலழகைக் கண்டால்
காந்தள் மலர்களும் தன்
பொறாமையில் காந்தலாகும்.
தினமும் எனக்குக் கனா தரும்
என் கனவுலகில் உலாவரும்
ஆசை ஆதர்சக் காதலியே
மனங்கவர்ந்தும் முகமறியா
மாமரத்துக் குயி(ர)ல் ஆனவளே-
எங்கே பிறந்திருக்கிறாய் நீ?
ரவிஜி…@ மாயவரத்தான் எம்ஜிஆர்
(புகைப்படங்கள் : நன்றி கூகிள்)
(வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்றிருந்தபொழுது பதிவிட்டது)

சோகத்தொ(த)ங்கல்!

சோகத்தொ()ங்கல்!

உள்ளொன்று வீற்றிருக்க
புறமொன்று காட்(சி)டி நட(டி)க்கும்
முகமூடி() பொய் முகங்கள்!
விற்பனை ஆகாது தங்கிய
சோகம் தாளாது - தொங்கிய
இவனின் உண்மை முகமூடிகள்!
ரவிஜி---
(புகைப்படம் – ரவிஜி)
(காசி செல்லும் வழியில் சென்னையில் கிளிக்கியது) 
(வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பேற்றிருந்த இரண்டாம் நாளில் வெளியிட்டது)

Friday 29 August 2014

திரு-நங்கைய(யா)ர்???


திரு-நங்கை(யா)ர்???
உடன் பிறந்தும் தங்கைக்கு -
ஆருயிர் அண்ணனில்லை;
என் அருமை தம்பிக்கோ- நான்
ஆசை ‘அக்கா’வுமில்லை?
பெற்றெடுத்த தாய்க்கு நான்
உற்ற தலை ‘மகனி’ல்லை;
பேர்கொடுத்த தந்தைக்கு நான்
ஊர் போற்றும் ‘மகளு’மில்லை!
பெண்மை உணர்வு கொண்டும்-
‘செல்வி’ மரியாதை கிட்டவில்லை;
‘திருமதி’ பட்டமும் எட்டவில்லை?!
செல்லுமிடம் ஏதும் அற்றுப்போனேன்
காய்ந்த கள்ளியென - இற்றுப்போனேன்?
கொக்கரித்து தி()னம் நி(வி)ற்கும்
மனம் வக்கரித்த வீணர்களால்
வக்கற்று - விக்கித்து நிற்கின்றேன்?
படாது சில்லரை - சுண்டும் சில விரல்கள்;
என் நெஞ்சம் சிந்தும் - குருதிப் பரல்கள்!
நட்பாய் நான் தரும் புன்னகையும்-
கைப்பாய் திரும்பி >> வரும் ‘ஏளனமாய்’?
தேடித்தேடி அலைவதோ - மனித நேசம்;
எனக்கென இறுதியாய் உற்றதோ-
தலையணை உறையான சேலையில்
‘பெற்ற’ என் - அம்மாவின் வாசம்!
ரவிஜி---
(புகைப்படங்கள் - நன்றி கூகிள்)

(திருநங்கையரும் நம்மைப்போன்ற மனிதப்பிறவிகள்தாம்! வெகுசிலரே சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வளர்ந்துள்ளபோதிலும் மற்றவர்கள் நிலை…? பெண்மை உணர்வு மேலிட்டிருக்கும் இவர்களை சகோதரியாகவோ அல்லது தாயாகவோ நினைக்காது, தீண்டத்தகாதவர்களாக இளக்கரித்து ஒதுக்கி ஓரங்கட்டும் மனிதர்களே அதிகம்! அந்த சகோதரிகளின் மனநிலை என்ன பாடுபடும்! சில நேரங்களில் அவர்கள் வெளிப்படுத்தும் சமுதாயத்தின் மீதான கோபம்கூட ஓரளவு நியாயமானதாகத்தான் தொன்றுகிறது! அவர்களையும் மனிதாபிமானத்தோடு நடத்துவோம்! அன்பான, ஆதரவு கலந்த வார்த்தைகளையாவது அவர்களுக்கு நாம் அளித்து அவர்களின் தீராத மனக்குமுறலை குறைக்க முயற்சிப்போம்! அந்த சகோதரியருக்கு இது எனது சிறு அர்ப்பணம்!)

(திரு. ரூபன் அவர்கள் அறிவித்துள்ள தீபாவளி-2014 கவிதைப்போட்டிக்கான விரும்பிய தலைப்பில் கொடுத்துள்ள போட்டிக் கவிதை இது)