Sunday, 30 December 2012
Monday, 24 December 2012
(மர)மனித(மர)ம்
(மர)மனித(மர)ம்!
மனிதனா-
மரத்துக்கு இணை?
தன்னை சிதைத்திடும் கைகளுக்கும்
மணம் கொடுக்கும்.
பசித்திருக்கும் மனிதனுக்கு
கனி கொடுக்கும்.
பறவைகள் சார்ந்திருக்க
இடம் கொடுக்கும்.
தன்னினம் அழித்திடும்
மனிதன் – தானழிந்தால்
எரித்திடத் தானே
சிதையாகும்.
உயர்ந்திருக்கும் மலைப்பரப்பில்
நிலச்சரிவைத் தடுத்திருக்கும்.
பூமிக்கு – வீசிடும் சாமரம்
நிழல் தரும் – பசிய மரம்.
பேசிக் கெடுத்திடும் மனிதன்;
பேசாமலே கொடுத்திடும் மரம்.
மூச்சாலும் மாசுபடுத்தும் மனிதன்;
சுவாசத்தாலும் சீர்படுத்தும் மரம்.
அலைந்து கெடுக்கும் மனிதன்;
அசையாமலும் கொடுக்கும் மரம்!
உருவத்தில் மட்டுமன்றி
செயலாலும் - உயர்ந்து நிற்கும்!
மரத்துக்கா…
மனிதன் இணை?
ஓரறிவு மரத்தின்…
மனிதத்துக்கா – இந்த
ஆறறிவு
மனித மரம் இணை…?
ரவிஜி . . .
(புகைப்படம்-நன்றி கூகிள்)
தரையிறங்கல்...!
தரையிறங்கல்
பாயின்மீது சோம்பல் முறித்தபடி
பார்வையை வீசுகிறேன்
பால்கனிக் கிராதியின் வெளியே.
வெள்ளை மேகங்கள் நிறைந்த
நீலவானம் பின்னணியாக,
தலையசைக்கும் பச்சை மரங்கள்.
கிளையற்ற ஒற்றை மரமாய்
நிமிர்ந்து நிற்கும்
கண்சிமிட்ட மறந்திட்ட
கலங்கரை விளக்கம்.
வானிலிருந்து பூமிக்கு
பார்வையால் வலைவிரித்து
வட்டமடிக்கும் வல்லூறுகள்.
பெயர் தெரியாத சிறுபறவை
பால்கனியில் வந்தமர்ந்து
“கீச்…”,”கீச்..”, என்றழைக்க-
எழுந்து அருகே செல்கிறேன்;
கீழே
மரத்தடியில் – வரிசையாய்
கல்லறைகள்.
பறவை பறந்து இடம் பெயர
என் மனம் மீண்டு(ம்)
தரையிறங்கும்.
ரவிஜி…
(புகைப்படம்: நன்றி கூகிள்)
Sunday, 23 December 2012
குமிழிகள்
குமிழிகள்
கத்தும் கடலோரம்
காற்றை விரும்பி
மணல் மீது அமர்வு.
என் எதிரே-சோப்பு நீரில்
குமிழிகள் ஊதுகிறான்
விளையாட்டுச் சிறுவன்.
பல்வேறு அளவுகளாய் – பல
வண்ண வண்ண குமிழிகள்
மேன் மேலும்…!
காற்றில் மிதந்து
அலைகழிந்து வெவ்வேறு
திசைகளில்…
வெடித்துச் சிதறி
காற்றில் கரைகின்றன
வெவ்வேறு சமயங்களில்.
பூஜ்ய உ(க)ருப் பெற்று
பூஜ்யத்தில் உழன்றிருந்து
பூஜ்யமாகிப் போகிறோம
குமிழிகள் போல்-
மனிதர்கள் நாம்!
எண்ணம் முகத்தறைய
என்னையும் மீறி
முணுமுணுக்கிறேன்…!
‘காற்றில் கரையும்
குமிழிகள் செய்கிறான்…
கு(சு)றும்பன்!’
ரவிஜி…
Friday, 21 December 2012
அஞ்சலி
அஞ்சலி
ஒரு கொடியில் பிறந்திருந்தோம்
மலருமுன்னே உதிர்ந்திட்டாய்...
பாசத்தின் வாசம் உணருமுன்னே
காற்றோடு கலந்திட்டாய்.
அண்ணாவென்று அணைப்பாரில்லை
மாமாவென்று அழைப்பாருமில்லை.
நினைவில் நின்றதெல்லாம்
'தூளி'யில் உன் முகம்...
பள்ளி மணி ஒலித்திட
துள்ளி வரும் ஓட்டத்திலும்...
கல்லூரி பயின்றிட்டு
மொட்டவிழும் மலரெனவே
கட்டவிழ்ந்த களிப்பினிலும்...
ஆறுதல் தரும் அம்மாவிடம்,
அரவணைக்கும் அன்பு மகளிடம்,
ஆதுரமாய் 'ராசா'வெனும் ஆத்தாவிடம்...
உன் முகம் ... தேடுகிறேன்...
'அண்ணா என்றிடும்
ஒவ்வொரு பெண்ணிலும்
உன்னையே காண்கிறேன்...!
ரவிஜி...
(வானின்று பாசமழை பொழியும் அன்புத் தங்கைகள் வீணா, ரெமி நினைவாக...)
Monday, 10 December 2012
தூக்கம் வராத இரவுகள்...?
தூக்கம் வராத இரவுகள்...?
கண்ணடிக்கும் பருவம்
தொலைந்து போனது
கண்ணிமைக்கும் நேரமாய். . .
கண் - துயில மறுத்திருக்கும்,
இதயத்தில் பாரமாய்.
ஜன்னல் வழி
பால் நிலவொளி
பகலெனப் பொழியும்.
ஊமையென உள்மனமோ
இருளினில் உழலும்.
அன்பால் அரவணைத்து
இதழ் பதித்த இதம்
மீண்டும் மீண்டுமாய்
நெருஞ்சியென நெருடும்.
சில்வண்டின் ரீங்காரமும்
கிறீச்சென்று காதறுக்கும்
ஓலமாய் உரத்துக் கேட்கும்.
முழுமையான தனிமையென
வெறுமையில் உழல்கையில்
நரகத்தையே நேரில் காட்டும்
தூக்கம் வராத இரவுகள்...?
ரவிஜி. . .
புகைப்படம்:நன்றி கூகிள்
Saturday, 8 December 2012
Tuesday, 9 October 2012
நான் = நீ = அவன்(ள்)...
நான் = நீ = அவன்(ள்)...
சூரியனைக் கண்டு
சுணங்கிப் போகும்
பனித்துளியல்ல நான்;
சுடும் சூரியனையும்
எதிர் கொள்ளும்
வியர்வைத் துளி!
சொகுசாய் = மலர்கள்
தீண்டும்
தென்றலல்ல நான்;
முரட்டு மரங்களையும்
மோதி முறிக்கும்
சூறாவளி!
அடி பணிந்து
அடங்கிப் போகும்
கரையல்ல நான்;
ஆர்ப்பரித்து
எதிர்த்து எழும்
கடலலை!
அநீதிகள் கண்டு
கொதித்துச் சிலிர்க்கும்...
தனியனல்ல நான்;
நான்...,நீ..., அவன்(ள்)...,
நாம்...!!!
-ரவிஜி...
Monday, 8 October 2012
Wednesday, 3 October 2012
Monday, 1 October 2012
Sunday, 30 September 2012
Friday, 28 September 2012
வண்ணத்துப் பூச்(சு)சி…!
வண்ணத்துப் பூச்(சு)சி…!
காலையில் கல்லூரி…
கிளம்பும் ‘முன்’ கோபம்
மாலையில் மீதமென –
முறுக்கிய முகம்…
மீறிப்பீறிடும் ...
முறுவலாய் மாறிட,
‘அப்ப்ப்பா…!’ என்று
என் கழுத்தினில் மாலையாகி
கன்னத்தில் பதிந்திடும்
சென்னிற முத்தங்கள்
… … … … … …
மயங்கிடும் மாலையில்
சாலையில் நடக்கையில்
கன்னத்தில் வண்ணமேற்றும்
வண்ணத்துப் பூச்சிகள்…!
ரவிஜி…
புகைப்படம் : நன்றி கூகிள் !
Wednesday, 12 September 2012
Friday, 7 September 2012
Subscribe to:
Posts (Atom)