Monday, 29 June 2015

பி(உ)ழைப்பு!



பி(உ)ழைப்பு!
பசியாம் பிணியில் இவர் வயிறு;
செருப்பு அ(றி)ணியா இவர் பாதம்!
பள்ளி சென்றிட வழியில்லை!
தோளில் புத்தகச் சுமையில்லை!
வண்ணம் பூசுதல் இவர் வேலை
எண்ணம் - உணவு மூவேளை!
குடும்பத்தின் பாரம் சுமப்பதனால்
வாழ்க்கைப் பாடம் இவரறிவார்;
உலகில் பிறந்த அனைவர்க்கும்
வாழ்க்கைப் பாதை ஒன்றாகும்
வாய்ப்பைத் தேடி நடந்திடவே
வாய்த்த திசைகள் வேறாகும்!
பிழைப்பை வென்றிட வழிதேடும்
உழைப்பே இவரை நிலைநிறுத்தும்!
ரவிஜி---
(புகைப்படம் – நன்றி கூகிள்)

Saturday, 27 June 2015

திருவாளர்கள் ரூபன் மற்றும் யாழ்பாவாணன் அவர்கள் இணைந்து நடத்திய “உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி 2015”ல் ஆறுதல் பரிசு



திருவாளர்கள் ரூபன் மற்றும் யாழ்பாவாணன் அவர்கள் இணைந்து நடத்திய “உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி 2015”ல் ஆறுதல் பரிசு
       திருவாளர்கள் ரூபன் மற்றும் யாழ்பாவாணன் அவர்கள் இணைந்து நடத்திய “உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி 2015”ல் எனக்கு ஆறுதல் பரிசு கிடைத்துள்ளது என்பதனை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் இருவருக்கும், மற்றும் எனது கவிதையை பரிசுக்கு தெரிவுசெய்த நடுவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்! பரிசினை வென்றுள்ளவர்களுக்கும், கலந்துகொண்டோர்க்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்!
பரிசு அறிவிற்பிற்கான இணைப்பு இதோ
பரிசிற்குத் தெரிவுசெய்யப்பட்ட எனது கவிதை கீழே!
இணையத் தமிழே இனி…
இருப்பிடம் அற்றுப்போய்
புலம் பெயர நேர்ந்தாலும்
தமிழினினம் ஒருங்கிணைய
வழியின்றிப் போனாலும்
உணர்வதனால் ஒன்றாகும்
ம()றத் தமிழர் நாமாவோம்!
இடமின்றிப் போனாலும்
தடமின்றிப் போய்விடுமோ?
தமிழன் என்று சொல்லி
தலை நிமிர்ந்து  நின்றிடவே,
உணர்வுகளை ஏந்தி வரும்
ஓ(போ)ர் களம் என்றாகும்-
இணையில்லா ‘இணைய’தளம்!
முத்தமிழும் ஒத்திசையும்
க(வெ)ட்டி வைத்த கரும்பெனவே
மட்டின்றி இனித்திருப்பாய்
தமிழ()னை இணைத்திருப்பாய்
ஈடு இணை இல்லாததாய்-
இணை(த)யத் தமிழே ‘இனி’…!
ரவிஜி @ மாயவரத்தான் எம்ஜிஆர்

Wednesday, 24 June 2015

கண்ணாமூச்சி!



கண்ணாமூச்சி!
கடலெனவே நிறைந்ருக்கும்
உனக்கான வாய்ப்புக்கள்!
என்றாலும் வாழ்க்கையிலோ-
கண்ணாமூச்சி ஆட்டங்கள்!
கண்ணெதிரே தென்படாது
மறைவாய் ஒளிந்திருக்கும்;
வைரமான வாய்ப்பதனை
தேடி நீயும் ப(பெ)ற்றிடவே-
நான் பெற்ற கண்மணியே
நீ பெறுவாய் ஓர் பயிற்சி!
ரவிஜி
(புகைப்படம்: நன்றி கூகிள்)

Tuesday, 23 June 2015

சுழலும் – உலகம்



சுழலும் – உலகம்
தன்னை உலகம்
சுற்றிச் சுழல்வதை
உணரச் செய்திடும்
சாட்டை சுழற்றிய
பம்பரம் போலும்
சுற்றிச் சுழன்றிடும்
என்றன் உலகம்
மகளின் நாட்டியம்!
ரவிஜி 
(புகைப்படங்கள் : நன்றி வெங்கட் குட்வா)