இயற்கை ‘மணம்’
பூக்கள் மலர்ந்து குலுங்கும் குளிர் நந்தவனம்!
மண(ய)க்கும் பன்னிறப் பூக்களின் - மென்
குவியலென இவனின் பொன்னிறக் காதலி.
கொஞ்சிடும் வேளையில் குறுக்கே வந்துற்று
கூந்தல் நுகரச் சிறகடிக்கும் ‘ராவண’ வண்டுகள்.
வண்டுகள் வந்தமர்ந்தால் எடை தாங்காது
வாடுமே நூலிடை என விரட்ட எத்தனிக்கும்
வாளேந்திக் காய்த்த வீரனின் காதல் கரம்.
விரட்ட நீண்ட கரம் விரலால் தீண்டுமென்று
எண்(நா)ணம் மேலிட்டு சிவந்து விலகும் காதலி…!
ரவிஜி…
(சங்க காலத்தில்தான் இதெல்லாம் சாத்தியம் போலும்…ம்!)
திரு வெங்கட்நாகராஜ் அவர்களின் படத்திற்கு “கவிதை எழுத வாருங்கள்” என்ற தலைப்பிற்கு ரவிஜியின் கவிதை இது.
கவிதைக்கான அறிமுகம் திரு. வெங்கட் நாகராஜ் அவர்கள் வலைப்பூவில் கண்டபடி.
மாயவரத்தான் எம்ஜிஆர் எனும் வலைப்பூவில் 2012-ஆம் வருடம் முதல் எழுதி வரும் திரு ரவிஜி தன்னை ‘கவிதைக் கிறுக்கன்’ என்று தலைப்பில் குறிப்பிட்டு உள்ளார். இது வரை அவரது கவிதைகளை/படைப்புகளை நான் படித்தது இல்லை. அவரது கவிதையை மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்தபின் அவரது பதிவுகளில் சிலவற்றை படித்தேன். அப்படி படித்ததில் பிடித்த கவிதை ஒன்று எனது அடுத்த ஃப்ரூட் சாலட் பதிவில் வெளியிடுகிறேன். அவரது பதிவுகளை நீங்களும் படிக்கலாமே!
(உன்னத ஓவியம் வரைந்த திரு. ராஜன் அவர்களுக்கும், கவிதையை தனது வலைப் பூவில் வெளியிட்ட திரு. வெங்கட் நாகராஜ் அவர்களுக்கும். எனது மனமார்ந்த நன்றிகள்)