Saturday 16 April 2016

இறு(தீ)திப் பயணம்!இறு(தீ)திப் பயணம்!
“ஐயோ அவரா… ரொம்ப நல்ல மனுஷனாச்சே…!
வீட்டுக்கு ‘பாடி’ய எடுத்துகிட்டு வந்தாச்சா?
கண்ண ரெண்டயும் தானம் குடுத்தாச்சா…?
எத்தனை மணிக்கு எடுக்கப் போறாங்க?”
கேள்வியுறும் மனிதர்கள் ஒவ்வொருவர்க்கும்
வெவ்வேறாக இருக்கின்றன கேள்விகள்!
விபூதிப்பட்டை நடுவே ஒரு ரூபாய் பொட்டு;
சிலருக்கு கூலிங் கிளாஸ், கோட்டு-சூட்டு;
போகும் வழியதனில் வெடிக்கும் வேட்டு;
அசையும் தேரெனவே பூக்களால் பல்லக்கு;
இதுநாள் கண்டதில்லை இன்று குளிர்பெட்டி---
வாசலில் கிடத்தி சுற்றீலும் பேச்சு-வெ(வே)ட்டி!
அரைவயிறும் உண்டதில்லை-இன்று ‘ஆனந்த’பவன்
வந்ததில் பலபேர் வாசலுடன் திரும்பிச் செல்ல,
பெண்டிர் பாச(மு)சுற்றும் தெருவில் நின்றுபோகும்!
சூட்டிய மாலைகள் வழியில் உதிர்(ந்)த்துப்போகும்,
தட்டிய வரட்டி, மரம் உடைத்த கட்டையாலும்
இறுதிப் படுக்கையில் வாயில் கொஞ்சம் அரிசி;
கண்ணில் முகம் மறையும் நேரமிது ‘நீ - தரிசி’!
வாழ்க்கை முடிந்(த்)தோர்க்கு தீயில் ஒரு வேள்வி;
திரும்பும் வழிதனிலே  எழும்(ப்)பும் பல கேள்வி;
வாழ்நாள் முழுதிலும் உடுத்திடக் கொடுத்தோமா?
ஒருவேளை உணவேனும் மனதார()த் தந்தோமா?
அன்பாய் கனிவாய் அரைவார்த்தை விசாரிப்பு…?
மாந்தர்தம் தீமைகள் தீயோடு தீய்ந்து-போகும்;
பாயிலே ஓயுமுன்னே நன்மை செய்திருப்போம்;
உடலுக்கு மரியாதை இறுதியிலே செய்வதிலும்-
இருக்கும் காலமதில் இனியவை தந்திருப்போம்!
வேஷம் ஏதுமில்லா பாசம் காட்டிடுவோம்.
போனவர் வாழ்க்கையிலே பாடம் பெற்றிட்டால்-
இருக்கும் மனிதர்களின் பாதைகள் இனிதாகும்.
கண்ணீர்த் துளிகளிலே பாடம் எ()னக்கிருக்கும்;
இறுதியிலே மூட்டும் தீ எ()னக்கும் காத்திருக்கும்!
ரவிஜி---
(படங்கள் - ரவிஜி; இடம் - காசி, அரிச்சந்திரா படித்துறை)

<--ம்பும்ரு(வி)தி <-- காலப்பக்கங்கள்!<--
<--ம்பும்ரு(வி)தி - காலப்பக்கங்கள்!
என் காலப்புத்தகத்தின் பக்கங்களை
மீண்டு(ம்) நான் திருப்பிட வேண்டும்!
அஞ்சு மைல் தொலைவு தூரத்து-
மாரியம்மனை கும்பிட வேண்டி…
என் ஆத்தாவின் இடுப்பில் தொற்றி
ஆசை ஆசையாய் ஒரு பயணம்!
மேலே ‘சட்டை’ எதுவுமில்லாது-
டவுசரை மேலே இழுத்துவிட்டபடி
பலுங்கியும் கிட்டிப்புள்ளும் ஆடிய
கோட்டிக்கார கவினிறு நாட்கள்…!
மீசையுடன் ஆசையும் அரும்பிட-
கண்ணில்படும் கலர் தாவணிகளை
கட்டின்றி காதலித்த கவின் நாட்கள்…!
கல்லூரி நாட்கள் பி(மு)டித்து
பெயரின் பின்னாலொரு பட்டம்
கிட்டிய முதல் பெருமைத் தருணம்…!
வேலை கிடைத்ததாய் எனக்கு வந்த
கடிதத்தைப் பிரித்து முதலில்
படித்து நெஞ்சம் துள்ளிய நேரம்!
ஆசையாய் வாங்கிய வாக்மேனில்
முதலில் கேட்ட இசைராசாவின்
“அன்னக்கிளி உன்னைத்தேடுதே…!”
என்னையும் காதலா(ல்)ய் வரித்து
காதலின் பரிசென எனக்குக் கிட்டிய
என்றும் தித்திக்கும் முதல் முத்தம்…!
எங்கெங்கோ தேடித்தேடி ‘இவளே’தான்
என்று முடிவானதும் ‘மனைவி’க்கென
நான் வாங்கிவைத்த முதல் சேலை!
காலுதைக்கும் ரோஜாக்குவியலை
அள்ளி என் கையில் “அப்பாவப்பாரு…!”
சொல்லி என் தங்கை  கொடுத்திட
சிலிர்த்து நான் மய(ங்)க்கிய என்
செல்ல மகளின் வெல்லப் புன்னகை…!
பள்ளிச் சீருடையில் ‘அள்ளி’ச்செல்ல
உள்ளே செல்ல அடம்பிடித்து அவள்
கண்கலங்கிட்ட ‘டாட்டா’  தருணம்!
பிளஸ்டூ பரிட்சைக்கும் - ‘நீதான்
கூட்டி வந்துவிடனும்… ப்ளீஸ்பா!’ என
கழுத்தைக்கட்டி கொஞ்சிய பாசம்!
கம்ப்யூட்டர் படித்து கல்லூரி முடித்து
காலத்தே ‘பிடித்த’ வெலையில் இணைந்து
முதல் சம்பளத்தில் அவள் வாங்கி
எனக்கும் மனைவிக்குமாய் அன்பளித்த
காலத்தைக் கடக்கும் கடிகாரங்கள்…
வரும் பிரிவின் முதல் படியெனவே
வேலை நிமித்தம் என்று சொல்லி-
விசாவோடு ஏர்டிக்கெட்டுடன் என் மகள்…
முதல் பிரிவினை ஏற்றிட வெறுத்து-
மகிழ்ச்சிப் பக்கங்களைத் தாண்ட மறுத்து,
காலுதைத்து சிணுங்கும்  சிறுபிள்ளையாய்
முகவரி தேடிச் செல்லும் கடிதமென
முதல்-வரி நாடிச் சென்று ப(பி)டிக்கும் …
முதுமையை மறுக்கும் - என் மனம்!
ரவிஜி…