Showing posts with label விஜிகே-12. Show all posts
Showing posts with label விஜிகே-12. Show all posts

Friday, 7 November 2014

விஜிகே-12 வெண்மை சற்றே உண்மை! விமர்சனம்!!!


விஜிகே-12 உண்மை சற்றே வெண்மை! விமர்சனம்!!!

சொல்லாத சொல்லுக்கு - விலையேதுமில்லை! செல்லாத விமர்சனத்திற்கு – பரிசேதுமில்லை!!! (ஆனால் அதன் பின்னர் கிடைத்ததோ - பெரும் பொக்கிஷம்!!!)
     இந்த விமர்சனப் போட்டியைப்பற்றிக் கேள்விப்பட்டு நான் எழுதிய முதல் விமர்சனம்! நண்பர் சொன்ன இ-மெயில் ஐடியை அரைகுறையாகக் காதில் வாங்கிக்கொண்டு valambal@gmail.com-ற்கு பதிலாக   balambal@gmail.com அனுப்பிவிட்டேன்! பின்னர் வாத்தியாருக்கு சரியான மெயில் ஐடிக்கு மீண்டும் அனுப்பி அவரது கருத்தைக்கேட்டேன்! மிகவும் பெருந்தன்மையுடன் அவரது கருத்தோடு அன்பையும் உற்சாகத்தையும் சேர்த்து பதிலளித்திருந்தார்! விஜிகே அவர்களின் உள்ளம் உண்மை முற்றிலும் வெண்மை என்பது எனக்குப் புரிந்தது!! அடுத்த விஜிகே-13ல் மூன்றாம் பரிசோடு எனது வெற்றிக்கணக்கு துவங்கியது! பின்னர் விஜிகே என்ற ‘மா’மனிதரின் மனதில் இடம் கிடைத்து ‘இதயக்கனி’யாகவும் பதவி உயர்வு பெற்றது தனிக்கதை-தொடர்கதை! நான் எழுதிய முதல் விமர்சனம் இதோ - வார்த்தைக்கு வார்த்தை அப்படியே தந்துள்ளேன்! இதற்கு நடுவர் அவர்களும் கருத்திட்டால் மிகவும் மகிழ்வேன்!
என்றும் அன்புடன்,
உங்கள் எம்ஜிஆர்!!!

VGK REFERENCE NO.12.
திரு வை.கோ. அவர்களின் “ உண்மை சற்றே வெண்மை” சிறுகதைக்கான விமர்சனம்.
தூய்மை, உண்மை, என்றாலே வெண்மைதான் அடையாளப்படுத்தும் நிறமாக இருந்து வருகிறது. “சற்றே வெண்மை” என்ற வார்த்தைகள் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி கதைக்குள் வாசகனை இழுத்துச்செல்கிறது.
முன்னிலை, படர்க்கை அதிகமின்றி தன்னிலையிலேயே கதையை எழுதியிருப்பது கதாநாயகியின் உணர்வுகளை அழுத்தமாக பதிவு செய்கிறது. பசுக்கள் மற்றும் கன்றுகளை அந்தக் குடும்பம் பராமரிக்கும் விதத்திலிருந்தும் வாயில்லா ஜீவன்களையும் குடும்பத்தின் உறுப்பினர்களாகவே கருதுவதும் பாசமுள்ள ஜீவகாருண்ய சிந்தனையுள்ள மனிதர்களாக அந்த குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் “கோமாதா எங்கள் குலமாதா” என்று இருப்பதை வெளிச்சம் போட்டுக்காட்டுவதாக அமைகிறது. பசுக்களே குடும்பத்தின் வருமானத்திற்கு வழி செய்வதாக வாழ்வாதரத்திற்கு காரணமாக இருந்தாலும் கன்றுகள் குடித்து எஞ்சிய பாலைக்கொண்டே வருமானத்திற்கு வழிவகை செய்துகொள்வது கன்றுகளையும் மகளைப்போலவே கருதுவதை ஆழத்துடன் வெளிப்படுத்துகிறது.
மகளுக்குத் தேவையான நகைகள், பணம் என்று எல்லாவற்றையும் சேமித்துவைத்தும்கூட சாதகம் - சாதகமின்றிப் போனதாலும் சில குறைகளாலும் திருமணம் தள்ளிப்போகின்ற நிலை-
இதற்கிடையில், ஓரிரு பசுக்களே இருந்த என் வீட்டு மாட்டுத்தொழுவத்தில் பல பசுமாடுகள் புதியதாக வந்து, சுமார் நாலு மாடுகளுக்கு பிரஸவங்கள் நிகழ்ந்து இன்று ஆறு பசுக்களும், எட்டு கன்றுக்குட்டிகளுமாக ஆகியுள்ளன.”
என்ற வரிகளின் மூலமாக பசுக்களுக்கும்கூட குடும்பம் விருத்தியான நிலையும், மகளுக்கு ஏற்பட்ட தேக்கமும் வருத்தத்துடன் கோடிட்டுக்காட்டப்பட்டுள்ளது. மேலும் மகளின் வளர்ச்சியோடு பசுக்களும் கன்றுகளுடன் சேர்ந்த தந்தையின் பொருளாதார வளர்ச்சியும் ஒரு சினிமா இயக்குநரின் திரைக்கதை முத்திரையோடு எழுதப்பட்டுள்ளது.

ஒரு சிறிய பசுமாட்டுப் பண்ணை நடத்துபவரின் பெண் தானே! பெரியதாக என்ன சீர் செலுத்தி செய்து விடப்போகிறார்கள்!” என்ற எண்ணமாகக்கூட இருக்கலாம் என் திருமணம் தடைபடுவதற்கு.” என்ற வரிகள் என்னதான் பொருளாதாரத்தில் உயர்ந்து நின்றாலும் குடும்பத்தலைவரின் வேலை திருமணச் சந்தையில் முக்கியமான ஒன்றாகக்கருதப்படுவதை எடுத்துச்சொல்கிறது.
ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் பண்ணு” என்ற உலக வழக்கிற்கு எதிராக உண்மையில் ஒரு பொய்யும் சொல்ல விரும்பாத குடும்பம் - அற்புதம். கதாநாயகியின் பாத்திரப்படைப்பு முத்தாய்ப்பு. உண்மை சொல்லும் காரணத்தாலேயே திருமணத்தடை ஏற்படுவது “வெண்ணிறப் புள்ளியே இவளது வாழ்க்கையில் ஒரு கரும்புள்ளியாய் உறுத்துவது –

உண்மையை இப்போது மறைத்துவிட்டுபிறகு இந்த ஒரு மிகச்சிறிய வெண்மைப் பிரச்சனையால்என் இல்வாழ்க்கை கருமையாகி விடக்கூடாதே என்று மிகவும் கவலைப்படுகிறோம்”
என்ற வரிகள் மூலமாக பெண்ணினத்தின் குமுறலாகவே வெளிப்படுகிறது. ஒரு ஐந்தறிவு ஜீவனால் உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடிவதோடு அதற்கு வடிகாலும் ஏற்படுவது யதார்த்தமாக நிகழும்போது அழகும் குணமும் நிறைந்து நல்ல குடும்பத்தில் பிறந்து வளர்ந்தும் திருமணத்திற்கு ஏங்கி நிற்கும் அவல நிலை கதாநாயகிக்கு ஏற்படுவது வாசகனுக்கு கதாசிரியர்மீது கோபத்தையே உண்டுபண்ணக்கூடும்.
ஆதிமனிதனிடமிருந்து பல படிகள் நாம் பரிணாம வளர்ச்சிபெற்று வந்துவிட்ட சூழ்நிலையிலும் நாகரீகம் என்ற பெயரில் ஆடைகள் அணிந்து என் உடலையும்அந்தக்குறையையும் நான் மறைக்க வேண்டியுள்ளது”
என்ற வரிகளின் குமுறல் ஒரு சிறியவெண்புள்ளி எந்த அளவிற்கு அப்பெண்ணை நொந்துபோகச் செய்துள்ளது என்பதையும் அதுவே பசுவிற்கு அழகோடு சேர்ந்து அதன் விலையையும் அதிகரிப்பதும் கோடிட்டுக்காட்டுகிறது.
நானும் ஒரு பெண் என்ற திரைப்படத்து கதாநாயகியின் மனநிலைக்கு நம் கதாநாயகியின் குமுறும் மனநிலை எள்ளளவும் குறைந்ததில்லை! அதில் கருப்பு இதில் வெண்மை!

முடிவாக, ஏற்கனவே பிறந்து வளர்ந்திருக்கும் இப்பெண்ணின் உடலில் காலம் இட்ட வெள்ளைப்புள்ளியைவிட அவளுக்கும் அவளின் குடும்பத்தார்க்கும் இருக்கும் வெ()ண்மை உள்ளத்தை உணர்ந்து அவளை மகிழ்வுடன் மணக்க முன்வரும் அந்த மனிதன் விரைவிலேயே அக்குடும்பத்தாரின் கண்ணில் படவேண்டும் என்ற உணர்வுடனேயே வேண்டுதலுடனேயே வாசகன் கதையைப் படித்து முடிக்கிறான்.
அருமையான கதைக்கரு, கதைத்தளம், மற்றும் பாத்திரப்படைப்புகள். விழிப்புணர்வைத்தூண்டும் கதை. வாழ்த்துக்கள்!