Showing posts with label ரவிஜி. Show all posts
Showing posts with label ரவிஜி. Show all posts

Tuesday, 30 June 2020

‘ஞாயிறி’ன் ஞாயிறு…!



     ‘கவிஞர் கணக்காயன்’ என்று அவருடன் கவியரங்கங்களில் ஒரே மெடையில் பங்கு பெற்ற ஆகப் பெரிய கவிஞர்களான கவியரசு. கண்ணதாசன், வாலிபக் கவிஞர் வாலி, கவிஞரும் முன்னாள் அமைச்சருமான வேழ வேந்தன் மற்றும் பலராலும் என்னைப்போன்ற சில துக்கடாக்களாலும் அறியப்பட்ட, அனைவரின் அன்பைப் பெற்ற கவிஞர் திரு. இ.சே. இராமன் அவர்கள் ஆயிரம் பிறைகண்ட பின்னர் தான் எழுதிய, தனக்கு எழுதப்பட்ட கவிதைகளை ஒரு தொகுப்பாக “கணக்காயன் கவிதைகள்” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளார். அதில் ஒரு பிரதியை தன் கையொப்பமிட்டு எனக்கு அன்புடன் அளித்தார். அவர் தொகுத்துள்ள 251 கவிதைகளில் நான் எனது மனந்தோன்றியபடி அவரின் 70ம் அகவையின் போது சந்திக்க வாய்த்த சமயத்தில் எழுதிக்கொடுத்த கவிதை(..?)க்கு 17ம் கவிதையாக இடமளித்து (தன் இதயத்திலும் இடம் கொடுத்ததைப்போல) கெளரவப்படுத்தியுள்ளார்.
     எதையுமே கவித்துவத்துடன், எதுகை மோனையுடன், நகைச்சுவை உணர்வுடன் வெளிப்படுத்துவது இவரின் பெரும் சிறப்பு. நிறையவே எழுதுமாறு சற்றே சொம்பேறியான என்னையும்கூட ஊக்குவித்து வருபவர். ஓய்வு பெற்ற தமிழாசிரியரான இவர், தமிழக முன்னாள் முதல்வரான திரு. மு. கருணாநிதி அவர்களின் மாபெரும் ரசிகர். நானும், கவிஞர் கணக்காயன் அவர்களின் மாப்பிள்ளையான திரு. ஈ.சீ. சேஷாத்திரி அவர்களும் மக்கள் திலகம் திரு. எம்.ஜி.ஆர். அவர்களின் ரசிகர்கள். திரு.எம்.ஜி.ஆர் மற்றும் திரு. கருணாநிதி அவர்களிடையே நிலவிய ஆழ்ந்த நட்பைப்போலவே எங்களின் நட்பும் அமைந்தது. தனது மகன்கள் மற்றும் மகள்கள் அனைவருக்கும் தூய தமிழ்ப் பெயர்களையே வைத்துள்ளார். பேசும்பொழுது பிற மொழிக்கலப்பின்றிப் பேசுவது இவரின் மற்றொரு சிறப்பு. ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்தும்போது அதிலும் எதுகை-மோனை இருக்கும்.  பொடி போடுபவர்கள் தான் நன்றாக பொடியை உறிஞ்சி, தும்மலின்றி கையை உதற மற்றவர்கள் தும்மல் போடுவார்கள். அதுபோல இவரும் ஒரு நகைச்சுவையை சர்வசாதரணமாக சொல்லிவிட்டு கேட்பவர்கள் சில வினாடிகள் சிந்தித்து, சிரிக்க இடம் கொடுத்து பின்னர் தானும் சேர்ந்து சிரித்து மகிழ்வது இவருக்கு வழக்கமான ஒன்று. இன்னும் இவரிடம் இயல்பான குழந்தைத்தனமும், குதூகலமும் தொற்றிக்கொண்டிருக்கக் காரணம், இவரின் வாழ்க்கைத் துணையாய் அமையப்பெற்ற திருமதி. அர. வனஜாமணி அவர்கள்தான் என்றால் அது கொஞ்சமும் மிகையில்லை. அவர்களும் ஓய்வுபெற்ற ஆசிரியை என்பது கூடுதல் சிறப்பு. இதற்குதான் என்றல்லாது எதற்கும், எவர்க்கும் கவிதை படைத்துவிடும் பெருந்தன்மை இருப்பதனால் இவரின் படைப்புகள் ஏராளம்-ஏராளம். இந்த முதல் தொகுப்பு ஒரு ஷோ-கேஸ்தான். இன்னும் குடவுன் அளவுக்கு இவரிடம் மீதமிருக்கும் கவிதைகள் நிறைய உண்டு. தனது 90ல் ஒன்றும் 100ம் அகவையில் ஒன்றும் என இவர்மேலும் கவிதைத் தொகுதிகள் வெளியிடுவது தொடரவேண்டுமென்பது எனது வேணவா. எனது சிரம் தாழ்த்திய வணக்கங்கள் கவிஞர் திரு. கணக்காயன் அவர்களே.
என்றென்றும் அன்புடன்...
விஜி
(ஒரு முறை இவர் சென்னையிலிருந்து புதுவை வந்த மறுநாள் காலை என்னை அலைபேசியில் அழைத்தபோது ஞாயிறான அன்று நான் தூக்கக் கலக்கத்தில் எதையோ சொல்லிவிட்டு மீண்டும் தூங்கிவிட்டேன். ஞாயிறு காலை ஆறரை என்பது எனக்கு நடு ராத்திரி அல்லவா.       கண்விழித்ததும் வடிவேலு பாணியில…ஆஹா..என்று எண்ணி இதனைக் கிறுக்கி, அலைபேசியில் அழைத்துப் படித்தேன்.  மிகவும் மகிழ்ச்சியடைந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பாக பழைய நாட்குறிப்பில் கிடைத்த இதை இன்று இவரது கவிதைத் தொகுப்பு பற்றிய குறிப்புடன்
வெளியிடுவதில் மிகவும் மகிழ்கிறேன்.)



ஞாயிறி’ன் ஞாயிறு…!
ஞாயிறும் ஓய்வெடுக்கும் ஓர் ஞாயிறில்,
திங்கள் உலவும் நேரந்தான் எனக்கு.
ஞாலம் விழிக்கத் துவங்கி – என்னில்
ஞானம் இன்னும் துயிலெழாத நேரம்;
சிணுங்கத் துவங்கும் என் செல்பேசி.
ஞாயிறை அணைத்திருந்த நித்ராதேவி
“யாரிந்த வேளையில் – ராவணன்..?”என,
செல்லிடப் பேசியோ(ர்) செல்லக் குரலில்-
“நான் உங்களின் நலம் விரும்பும்,
பண்ணேற்றிவரும் பொன்னேரி ராமன்” என,
நித்திரை போதாதென விழித்திரை கெஞ்ச;
‘வா’வென மீண்டும் நித்திரா அழைத்துக்கொஞ்ச:
ஆதவனோ அவ்வணைப்பில் வீழ்ந்தான் துஞ்ச!
ஞாயிறின் ஞாலம் மீண்டு(ம்) விழித்தது;
இரவி’யின் விடியலில் கவிதை பழித்தது:
“நலம் நலமறிய ஆவல் கணக்காயரே…
நீவிர் ஆகிடவேண்டாம் பிணக்காயரே” என.
விஜி



Friday, 7 November 2014

விஜிகே-12 வெண்மை சற்றே உண்மை! விமர்சனம்!!!


விஜிகே-12 உண்மை சற்றே வெண்மை! விமர்சனம்!!!

சொல்லாத சொல்லுக்கு - விலையேதுமில்லை! செல்லாத விமர்சனத்திற்கு – பரிசேதுமில்லை!!! (ஆனால் அதன் பின்னர் கிடைத்ததோ - பெரும் பொக்கிஷம்!!!)
     இந்த விமர்சனப் போட்டியைப்பற்றிக் கேள்விப்பட்டு நான் எழுதிய முதல் விமர்சனம்! நண்பர் சொன்ன இ-மெயில் ஐடியை அரைகுறையாகக் காதில் வாங்கிக்கொண்டு valambal@gmail.com-ற்கு பதிலாக   balambal@gmail.com அனுப்பிவிட்டேன்! பின்னர் வாத்தியாருக்கு சரியான மெயில் ஐடிக்கு மீண்டும் அனுப்பி அவரது கருத்தைக்கேட்டேன்! மிகவும் பெருந்தன்மையுடன் அவரது கருத்தோடு அன்பையும் உற்சாகத்தையும் சேர்த்து பதிலளித்திருந்தார்! விஜிகே அவர்களின் உள்ளம் உண்மை முற்றிலும் வெண்மை என்பது எனக்குப் புரிந்தது!! அடுத்த விஜிகே-13ல் மூன்றாம் பரிசோடு எனது வெற்றிக்கணக்கு துவங்கியது! பின்னர் விஜிகே என்ற ‘மா’மனிதரின் மனதில் இடம் கிடைத்து ‘இதயக்கனி’யாகவும் பதவி உயர்வு பெற்றது தனிக்கதை-தொடர்கதை! நான் எழுதிய முதல் விமர்சனம் இதோ - வார்த்தைக்கு வார்த்தை அப்படியே தந்துள்ளேன்! இதற்கு நடுவர் அவர்களும் கருத்திட்டால் மிகவும் மகிழ்வேன்!
என்றும் அன்புடன்,
உங்கள் எம்ஜிஆர்!!!

VGK REFERENCE NO.12.
திரு வை.கோ. அவர்களின் “ உண்மை சற்றே வெண்மை” சிறுகதைக்கான விமர்சனம்.
தூய்மை, உண்மை, என்றாலே வெண்மைதான் அடையாளப்படுத்தும் நிறமாக இருந்து வருகிறது. “சற்றே வெண்மை” என்ற வார்த்தைகள் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி கதைக்குள் வாசகனை இழுத்துச்செல்கிறது.
முன்னிலை, படர்க்கை அதிகமின்றி தன்னிலையிலேயே கதையை எழுதியிருப்பது கதாநாயகியின் உணர்வுகளை அழுத்தமாக பதிவு செய்கிறது. பசுக்கள் மற்றும் கன்றுகளை அந்தக் குடும்பம் பராமரிக்கும் விதத்திலிருந்தும் வாயில்லா ஜீவன்களையும் குடும்பத்தின் உறுப்பினர்களாகவே கருதுவதும் பாசமுள்ள ஜீவகாருண்ய சிந்தனையுள்ள மனிதர்களாக அந்த குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் “கோமாதா எங்கள் குலமாதா” என்று இருப்பதை வெளிச்சம் போட்டுக்காட்டுவதாக அமைகிறது. பசுக்களே குடும்பத்தின் வருமானத்திற்கு வழி செய்வதாக வாழ்வாதரத்திற்கு காரணமாக இருந்தாலும் கன்றுகள் குடித்து எஞ்சிய பாலைக்கொண்டே வருமானத்திற்கு வழிவகை செய்துகொள்வது கன்றுகளையும் மகளைப்போலவே கருதுவதை ஆழத்துடன் வெளிப்படுத்துகிறது.
மகளுக்குத் தேவையான நகைகள், பணம் என்று எல்லாவற்றையும் சேமித்துவைத்தும்கூட சாதகம் - சாதகமின்றிப் போனதாலும் சில குறைகளாலும் திருமணம் தள்ளிப்போகின்ற நிலை-
இதற்கிடையில், ஓரிரு பசுக்களே இருந்த என் வீட்டு மாட்டுத்தொழுவத்தில் பல பசுமாடுகள் புதியதாக வந்து, சுமார் நாலு மாடுகளுக்கு பிரஸவங்கள் நிகழ்ந்து இன்று ஆறு பசுக்களும், எட்டு கன்றுக்குட்டிகளுமாக ஆகியுள்ளன.”
என்ற வரிகளின் மூலமாக பசுக்களுக்கும்கூட குடும்பம் விருத்தியான நிலையும், மகளுக்கு ஏற்பட்ட தேக்கமும் வருத்தத்துடன் கோடிட்டுக்காட்டப்பட்டுள்ளது. மேலும் மகளின் வளர்ச்சியோடு பசுக்களும் கன்றுகளுடன் சேர்ந்த தந்தையின் பொருளாதார வளர்ச்சியும் ஒரு சினிமா இயக்குநரின் திரைக்கதை முத்திரையோடு எழுதப்பட்டுள்ளது.

ஒரு சிறிய பசுமாட்டுப் பண்ணை நடத்துபவரின் பெண் தானே! பெரியதாக என்ன சீர் செலுத்தி செய்து விடப்போகிறார்கள்!” என்ற எண்ணமாகக்கூட இருக்கலாம் என் திருமணம் தடைபடுவதற்கு.” என்ற வரிகள் என்னதான் பொருளாதாரத்தில் உயர்ந்து நின்றாலும் குடும்பத்தலைவரின் வேலை திருமணச் சந்தையில் முக்கியமான ஒன்றாகக்கருதப்படுவதை எடுத்துச்சொல்கிறது.
ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் பண்ணு” என்ற உலக வழக்கிற்கு எதிராக உண்மையில் ஒரு பொய்யும் சொல்ல விரும்பாத குடும்பம் - அற்புதம். கதாநாயகியின் பாத்திரப்படைப்பு முத்தாய்ப்பு. உண்மை சொல்லும் காரணத்தாலேயே திருமணத்தடை ஏற்படுவது “வெண்ணிறப் புள்ளியே இவளது வாழ்க்கையில் ஒரு கரும்புள்ளியாய் உறுத்துவது –

உண்மையை இப்போது மறைத்துவிட்டுபிறகு இந்த ஒரு மிகச்சிறிய வெண்மைப் பிரச்சனையால்என் இல்வாழ்க்கை கருமையாகி விடக்கூடாதே என்று மிகவும் கவலைப்படுகிறோம்”
என்ற வரிகள் மூலமாக பெண்ணினத்தின் குமுறலாகவே வெளிப்படுகிறது. ஒரு ஐந்தறிவு ஜீவனால் உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடிவதோடு அதற்கு வடிகாலும் ஏற்படுவது யதார்த்தமாக நிகழும்போது அழகும் குணமும் நிறைந்து நல்ல குடும்பத்தில் பிறந்து வளர்ந்தும் திருமணத்திற்கு ஏங்கி நிற்கும் அவல நிலை கதாநாயகிக்கு ஏற்படுவது வாசகனுக்கு கதாசிரியர்மீது கோபத்தையே உண்டுபண்ணக்கூடும்.
ஆதிமனிதனிடமிருந்து பல படிகள் நாம் பரிணாம வளர்ச்சிபெற்று வந்துவிட்ட சூழ்நிலையிலும் நாகரீகம் என்ற பெயரில் ஆடைகள் அணிந்து என் உடலையும்அந்தக்குறையையும் நான் மறைக்க வேண்டியுள்ளது”
என்ற வரிகளின் குமுறல் ஒரு சிறியவெண்புள்ளி எந்த அளவிற்கு அப்பெண்ணை நொந்துபோகச் செய்துள்ளது என்பதையும் அதுவே பசுவிற்கு அழகோடு சேர்ந்து அதன் விலையையும் அதிகரிப்பதும் கோடிட்டுக்காட்டுகிறது.
நானும் ஒரு பெண் என்ற திரைப்படத்து கதாநாயகியின் மனநிலைக்கு நம் கதாநாயகியின் குமுறும் மனநிலை எள்ளளவும் குறைந்ததில்லை! அதில் கருப்பு இதில் வெண்மை!

முடிவாக, ஏற்கனவே பிறந்து வளர்ந்திருக்கும் இப்பெண்ணின் உடலில் காலம் இட்ட வெள்ளைப்புள்ளியைவிட அவளுக்கும் அவளின் குடும்பத்தார்க்கும் இருக்கும் வெ()ண்மை உள்ளத்தை உணர்ந்து அவளை மகிழ்வுடன் மணக்க முன்வரும் அந்த மனிதன் விரைவிலேயே அக்குடும்பத்தாரின் கண்ணில் படவேண்டும் என்ற உணர்வுடனேயே வேண்டுதலுடனேயே வாசகன் கதையைப் படித்து முடிக்கிறான்.
அருமையான கதைக்கரு, கதைத்தளம், மற்றும் பாத்திரப்படைப்புகள். விழிப்புணர்வைத்தூண்டும் கதை. வாழ்த்துக்கள்!

Saturday, 18 October 2014

ப(க)ட்டுச் சேலை?!


ப()ட்டுச் சேலை?!
சிறகை விரித்துப் பறக்கும்-
‘பருவம்’ மாறும் நிலைக்கென
‘மே(நூ)லாடை நான் அணிய;
உந்தன் ‘பட்டு’ப் பருவ மகள்
ப()ட்டாக அணிந்திடவே
என்னுயிர் தான் பிரித்து
நானணிந்த நூல் திரித்து
நெய்வதுவோ ஒரு சேலை?
ரவிஜி---
(பட உதவி - நன்றி கூகிள்)

Thursday, 16 October 2014

கா(ன)தலில் ‘வரி’த்’தேன்’!


கா()தலில் ‘வரி’த்’தேன்’!
தூய வெள்ளைக் காகிதமாய்
இருந்திட்ட உந்தன் நிஜம்!
'கண்ட' வாலைக் க(பெ)ண்கள்
உன்மேல் பதித்துச் சென்ற
தேன் கா()தல் பாவரிகள்!
என் விழிகளில் தேடியுன்னை
வரி’களினூடே ப(பி)டித்தேன்
உந்தன் சுயம் புரிந்த பின்னே
‘என்னவன்’ என வ()ரித்தேன்!
ரவிஜி---
(பட உதவி : நன்றி கூகிள்)

Tuesday, 16 September 2014

அப்பாவின் – ‘அம்மா!’…







அப்பாவின் – ‘அம்மா!’…
அவள் மூச்சில் ஊதிக் கட்டி வைத்த
பலூனை ‘குத்தி’விட்டானென்று
அறியாச் சிறுவனிடம் காழ்ப்பு…!
அவள் முத்தமிட்ட தடமென்று
மூன்று நாளான பின்னும்
மழித்திடாத அவன் கன்னம்….!
அவள் முகம் துடைத்த காகிதம்
ஆயிரம் ரூபாய் ப(ம)ணமெனவே
அவன் பர்சினுள் பத்திரமாய்….!
அவன் அம்மாவின் அழகு ஆரம்
அணிந்து இதழோரம் ‘அழகு’
காட்டிய அவன் தங்(கை)க முகம்….!
அப்ப்ப்……பா என்று அரவணைத்து
அவள் கொஞ்சிய வார்த்தைகளின்
அசரீரியாய் ஒலிக்கும் அவன்  காதில்….!!
அவன் அம்மா விட்டுக்கொடுத்த இடம்…..
அதில் அவள் பதித்திட்ட பாசத்தடம்….!
அவள் விட்டுச் செல்லும் வெற்றிடம்…???
மொட்டவிழ்ந்து ‘மணக்கும்’ ரோஜா
சேரிடம் சென்று சேர்ந்திருக்கும்.
முட்கள் சுமந்து நிற்கும் வேர்கள்-
‘காய்ந்து’ வக்கற்று சோர்ந்திருக்கும்…….!
MGR…
(எனது நண்பர் தனது ஒரே மகளைத் திருமணம் செய்து கொடுத்தபின்னர் சில நாட்கள் கழித்து நான் அவரைச் சந்தித்த போது “மகள் எப்படி இருக்கிறாள்” என்ற என் கெள்விக்கு பிரிவின் ஆற்றாமை தாளாது நடு ரோடென்றும் பாராது தெம்பி அழுத பின் “நல்லா  இருக்கா!” என்று கண்ணீருக்கிடையேயான புன்னகையுடன் சொன்ன கண்ணனுக்காக இந்தக் கவிதை)
(வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்றிருந்தபோது பதிவிட்ட கவிதை) 
(படங்கள் : நன்றி கூகிள்)