Showing posts with label life. Show all posts
Showing posts with label life. Show all posts

Thursday, 25 August 2016

ந(க)டப்பு…?!

ந(க)டப்பு…?!
மழையின் தூற(வ)லை அனுபவியுங்கள்;
வெற்றாய் நனைந்து திரும்பாதீர்கள்.
உணவின் சுவையிலே மயங்குங்கள்;
வயிற்றை மட்டுமே நிரப்பாதீர்கள்.
கவினுறு காட்சிகளை ரசியுங்கள்;
சி(நி)ந்தனையில் ஊறி ந(க)டக்காதீர்கள்.
தென்றலை உணர்ந்து தழுவுங்கள்;
காற்றாய் நினைத்து நழுவாதீர்கள்.
எதிரே கண்டால் புன்னகையுங்கள்;
புதிரென நினைத்து கடக்காதீர்கள்!
பணத்தை மட்டுமே ‘எண்ணா’தீர்கள்…
மனத்தை பற்றியும் நினையுங்கள்.
வாழ்க்கையை சுகித்து வாழுங்கள்
நாட்களை மட்டும் ந(க)டத்தாதீர்கள்!
எம்.ஜி.ஆர்...
(பட உதவி : நன்றி கூகிள்)
(முதல் அடி எடுத்துக் கொடுத்த பாப் மார்லிக்கு நன்றி)

Thursday, 9 April 2015

உலைக்களம்!

உலைக்களம்!
வறுமை எனும் கொடுமை-
வயிற்றினில் தீ எரிக்க
துள்ளியோடும் சிறுவயதில்
பள்ளிக்கூடம் நீ சென்று
பாடங்கள் படித்தறிய-
முடியாத உன் சோகம்?
இரும்பென அசையாத
இதயம் கொண்டிருந்தால்
அனுபவப் பாடந்தரும்
வாழ்க்கை உலைக்களம்
புடம்போட்ட தங்கமென
உன்னை - ஒளிரச்செய்யும்;
நிரந்தரப் புன்னகையில்
முகம் மிளிரச் செய்யும்!
ரவிஜி---
(புகைப்படம் – நன்றி கூகிள்)

Monday, 7 April 2014

பயணமும் மயக்கமும்!

பயணமும் மயக்கமும்!

பால் நிலவுப் பனி இரவில்
நெடிய பயணம் நிமித்தமாய்
என் கிராமத்து நிறுத்ததில்
ஒரு கொடிய காத்திருத்தல்!
தென்றலின் தண் தீண்டலில்
சிலிர்த்தோடும் பச்சை வயல்;
முழு நிலவின் ஒளிவீச்சில்
தென்னங்கீற்றும் பளபளக்கும்!
சாலையோரப் புதரினுள்
பின்னிசையாய் ரீங்கரிக்கும்
குறும்புச் சில் வண்டுகள்;
சலனமற்ற சாலைமேல்
காளைகள் பாரமிழுத்து
குளம்புகளால் தாளமிடும்;
என்னெதிரே நிமிர்ந்திருக்கும்
மின்மினிகள் அரும்பிட்ட
சாலையோரத்து நெடுமரம்.
அருகாமைத் தோப்பினுள்ளே
ஜோடியைத் தெடி அலையும்
கானல் வரிக் குயிலோசை;
சூழ்நிலையின் சுகம் கண்டு
நிலையில்லா குரங்கு மனம்
பயணத்தை கணம் மறக்கும்;
திருப்பத்தில் உரத்தொலிக்கும்
என் பேருந்தின் குழலோசை
மன மயக்கத்தைத் தீர்க்கும்!
ரவிஜி…
(புகைப்படம் : நன்றி கூகிள்)