Saturday 3 May 2014

VGK அவர்களின் சிறுகதை விமர்சனப் போட்டியில்- இரண்டாம் பரிசு!

VGK அவர்களின் சிறுகதை விமர்சனப் போட்டியில்- இரண்டாம் பரிசு!

 மதிப்பிற்குரிய திரு  வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் நடத்திவரும் சிறுகதைக்கான விமர்சனப் போட்டியில்

 VGK 14 - ’ 'நீ .. முன்னாலே போனா .. நா .. பின்னாலே வாரேன் ! ’ கதையின் விமர்சனத்திற்கு எனக்கு இரண்டாம் பரிசு கிடைத்துள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!

 வாய்ப்பளித்த திரு வை.கோ. அவர்களுக்கும், நடுவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்!

 'நீ .. முன்னாலே போனா .. நா .. பின்னாலே வாரேன்’

கதைக்கான இணைப்பு :


பரிசுபெற்றதற்கான அறிவிப்புக்கு இணைப்பு:



கதைக்கான என்னுடைய விமர்சனம் இதோ:
கதையின் தலைப்பினைப் பார்க்கும்பொழுது, முதலில் பழைய ‘என்னடி முனியம்மா ஒன் கண்ணுல மையி..’ என்ற குதூகலமான நாட்டுப்புறப்பாடல் வரிகள் போல இருக்கிறதே, ஒருவேளை இது ஒரு ஜாலிக்கதைதான் என்ற எண்ணம் ஏற்படுத்தினாலும், கதையின் துவக்க வரிகளே இதுவேறுவிதம் என்பதுபோல், வயதான தோற்றத்தில் நடிகர் ஜெமினி கணேசன் அவர்கள் காரிலிருந்து இறங்கிவருவதுபோன்ற தோற்றத்தை மனதில் ஏற்படுத்துகிறது!

          பெரியவருடன் ஐம்பது வயதில் ஒருவர் பழிவாங்கிவிட்ட முகபாவனையுடன் வருவதும், அவர் கிளம்புமுன்பாக பெரியவர் ஏதோ சொல்லமுயன்று அதற்கு அவர் காதிலும் வாங்காமல் பதிலும் எதுவும் சொல்லாமல் கிளம்பிச் செல்வதும் வசனமே எதுவுமில்லாமல், மவுனக் காட்சியாகச் சித்தரிக்கப்பட்டு ஒரு இறுக்கமான  சூழ்நிலையில் சினிமாவில் வரும் வசனமில்லாத காட்சியமைப்பினைப்போல கண்முன் நிறுத்துகிறது.
          
முதியவரின் தோற்றம் சித்தரிக்கப்பட்டிருப்பதிலிருந்து உடல் நலம், பணவசதி, கண்ணியமான தோற்றம், எல்லாமே இருந்தும் இவர் ஏன் இந்த முதியோர் இல்லத்திற்கு வரவேண்டும் என்ற கேள்வியை நம் மனதில் கதாசிரியர் ஏற்படுத்திவிடுகிறார்.
        
  கதையின் நாயகரை கதைக்குள் அழைத்துச் செல்லும் முக்கிய பாத்திரமாக ‘அரட்டை’ ராமசாமி அறிமுகம். வந்தவரை  உட்காரவைத்து தண்ணீர் கொடுத்து உபசரித்து மெதுவே கேள்விகளை துவக்குகிறார்.  முதியோருக்கே உரிய ஆர்வம், “பெரியவரைப் பற்றிய கதையைக்கேட்க அங்குள்ள அனைவரும் தங்கள் காதைத் தீட்டிக்கொண்டனர். ஒரு சிலர் தங்களின் காது மிஷினை சரிவரப் பொருத்திக் கொண்டனர்” என்ற வரிகளின் மூலம் வெளிப்படுத்தப்பட்டு நம்மை கதையின் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்கிறது.

ஆறே கேள்விகளில் பெரியவரின் மேல் அம்மாவைக்கொன்றதாக பிள்ளைக்கு வந்த சந்தேகம் மற்றும் கோபம் அதனால் பதினாறாம் துக்கம் முடியும் முன்பாக அப்பாவை முதியோர் இல்லத்திற்கு அனுப்பியதாக சொல்லி நமக்கு இன்னும் விறுவிறுப்பை அதிகரிக்கிறார்.

மறுநாள் காலையே மூதாட்டி ஒருவருக்கு சர்க்கரை நோய்க்கான ஊசி போடும் கம்பவுண்டர் நேரத்திற்கு வராததால் உணவும் அருந்த முடியாது திணறும் வெளையில், சற்றும் தடுமாறாமல் மருந்தின் அளவு பார்த்து ஊசியில் எடுத்து  இடதுகையால் சதையை உப்பலாகப் பிடித்து கை நடுங்காமல் ஊசிபோட்டுவிட்டு பஞ்சையும், சிரிஞ்சையும் குப்பைத்தொட்டியில் போடுவதை குறிப்பிட்டிருப்பதன்மூலம் அவரது நிதானம், அனுபவம், ஒழுங்கு இவற்றைச்சித்தரிப்பதோடு, அவரும் அவரது மனைவியும் சர்க்கரை நோயாளிகள் அதிலும் அவரது மனைவி இன்சுலீன் போடும் அளவிற்கு பாதிப்பு உள்ளவர் என்பதனை தெரியப்படுத்திவிடுகிறார் கதாசிரியர். மற்றும் “கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக நானே அவளுக்கு தினமும் ஊசி போட்டு வந்ததால், இந்த ஊசி போடும் கலை எனக்கு சுலபமாகப் பழகி விட்டது. ஒரு வேளை போட்ட இடத்திலேயே மறுவேளையும் போடாமல், கைகள், கால்கள், தொடை, இடுப்பு, வயிறு என மாற்றி மாற்றி, வலி ஏதும் ஏற்படாதபடி, மிகவும் கவனமாக மெதுவாகப் போட வேண்டியது முக்கியம்” என்ற வரிகளின் மூலம் மனைவியிடம் அவர் கொண்டிருந்த சிரத்தை, ஊசி போட அவர் கற்றுக்கொள்ளவேண்டியதின் அவசியம் தெளிவுபடுத்தப்படுகிறது.

எரியும் விளக்கில் திரி முந்தியோ, எண்ணெய் முந்தியோ என்று சொல்லுவார்கள். ஏதாவது ஒன்று தான் மிஞ்சும். அதுதானே உலக வழக்கம்?” என்ற வரிகளால் ‘கணவனும் மனைவியும் எண்ணெயும் திரியுமாக இருந்ததால்தான் குடும்ப விளக்கு பிரகாசமாக எரிந்தது, குடும்பம் வளர்ந்தது ‘என்பதனை கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

“அவள் கொடுத்து வைத்தவள் தான். பூவும் பொட்டுமாகப் போய்ச்சேர்ந்து விட்டாள். என்னைத்தான் அனாதையாக விட்டு விட்டுப் போய் விட்டாள். என்ன செய்வது? “என்று அவர் புலம்பும்போதும் முதியோர் இல்லத்தில் உள்ளோரெல்லாம் நாமனைவரும் ஒரு கப்பலின் பயணிகளே -  நமக்கு நாமே ஒருவருக்கொருவர் உறவு என்று ஆதரவளிப்பது முதியோர் இல்லங்களின் இன்றைய நிலைமையை பறைசாற்றுகிறது. அதற்கு அடுத்த கட்டமாக சிலர் வீடுகளில் முதியோருக்கு இல்லாமல் போன அரவணைப்பு அதன் காரணமாக சிலர் தாமே முதியோர் இல்லம் நாடிச்செல்வதும் “பரவாயில்லை. நாம் ஏதோ நம்மால் முடிந்த பணம் கொடுத்தாலும், நம் மீது அக்கறை எடுத்துக்கொண்டு, ஆட்களைப்போட்டு, நமக்கு வேளா வேளைக்கு, டயப்படி ஏதாவது ஆகாரம் கொடுத்து கவனித்துக்கொள்கிறார்களே; அதுவே பெரிய விஷயம் தான். சில வீடுகளில் கூட இதுபோல நேரப்படி ராஜ உபசாரம் நடக்கும்னு சொல்லமுடியாது; என்ற வரிகளால் கோடிட்டுக்காட்டப்பட்டுள்ளது.

மனைவி இருந்த காலத்தில் பெரியவர் வாய்க்கு ருசியாக வக்கணையாக சாப்பிட்டது, பின்னர் சர்க்கரை நோய் ஏற்பட்டு வாயைக்கட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டது பெயர் ‘சர்க்கரை நோய்’ என்றாலும் உண்மையில் கசப்பையே அளிக்கிறது என்பதனை அடிக்கோடிருகிறார் ஆசிரியர். சர்க்கரை நோயை எவ்வாறு அணுகுவது என்று விளக்கமாக பயனுள்ள வகையில் கதையினூடே சொல்லப்படுகிறது.

கண்டிப்பான அப்பா, அதனால் அம்மாவிடமே அதிகம் ஒட்டுதல் பெற்றபிள்ளைகள் என்று எதார்த்தமான குடும்பம் கண்முன்னே விரிகிறது.

கதையில் வரும் சுகர் மகாரஜாவின் பாத்திரப் படைப்பு முதியோர் இல்லத்தார்க்கு ஒரு தெளிவை ஏற்படுத்துகிறது. ‘sugar’பாடாய்படுத்துகிறது, ‘சுகர்’ பாத்திரம் பாடம் நடத்துகிறது. உபன்யாசம் கேட்கச் செல்லும் நேரத்தில் பெரியவரின் பெட்டி ஆராய்ச்சி செய்யப்படுகிறது. ‘பரீக்ஷித்து மஹாராஜா’ கதைகள் நமது கதையின் ஒருபகுதியாகவே மாறிவிடுகிறது.

          பாகவதம் முடியும் நேரம் பெரியவரின் வாழ்க்கையே முடியும் நேரம் என்று நமக்கே தொன்றச் செய்து bgm scoreஎல் ஷெனாய் வாத்தியங்கள் ஒலிப்பதுபோல ஒரு பிரமை ஏற்பட்டிருக்கிறது.  மனைவிக்கு இறுதியாக விரும்பிய இனிப்புவகைகளைக் கொடுத்து அதனால் அவர் இறந்ததாக கூறப்படுவது மெர்சி கில்லிங் என்று அவர் கூறுவது மனைவிமேல் உள்ள ஆழ்ந்த அன்பினையும் ராணுவப்பணியாளர் என்றதால் இறப்பை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உண்டு என்பதையும் தெரிவுபடுத்துகிறது. அதே முறையில் தானும் உயிர் நீப்பதும், //சர்க்கரை நோயாளிகள் எந்தவித உணவுக் கட்டுப்பாடுகளும் இல்லாமல், தங்களுக்குப் பிடித்ததை சாப்பிடவும், இந்தக் குறைபாடு வந்துவிட்டால் அதை முற்றிலும் போக்கவும் புதிய மருந்துகள் கண்டு பிடிக்கப்பட வேண்டும். அதற்கான மருத்துவ ஆராய்ச்சிகளுக்காக மட்டுமே சுமார் ஒன்றரைக்கோடி ரூபாய் மதிப்புள்ள என் சொத்துக்கள் முழுவதும் பயன் படுத்தப்பட வேண்டும்// என தன் உயிலில் எழுதியிருந்தார் என்ற இடத்தில் பெரியவரின் மனைவிமேல் கொண்ட பாசம், சர்க்கரை நோயால் அவர்களது இழப்புக்கள் அதன் பின்விளைவுகள் அதனால் எழுதிய உயில்….பெரியவரின் பாத்திரப் படைப்பு அற்புதம். நிமிர்ந்து நிற்கிறது.

 இறுதியில் அரட்டை ராமசாமி மவுனசாமியாகி மவுன அஞ்சலியுடன் கதை முடிக்கப்படுகிறது.

வாழ்க்கையில் யார் முன்னாலே… யார் பின்னாலே… காலமே அறியும்.

நன்றி..

18 comments:

  1. பரிசு பெற்றதற்கு இனிய வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி! தங்களின் தொடர்வெற்றிகளுக்கு எனது வாழ்த்துககள்!

      Delete
  2. உயர்திரு நடுவர் அவர்கள் சார்பிலும் என் சார்பிலும் தங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள் + அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    இந்தப் போட்டியில் தங்களின் மீண்டும் வெற்றியை தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளதற்கு என் நன்றிகள்.

    மேலும் மேலும் தொடர்ந்து இதே போட்டிகளில் கலந்துகொண்டு, மேலும் மேலும் பல்வேறு பரிசுகள் வென்றிட என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

    அன்புள்ள VGK

    ReplyDelete
    Replies
    1. மிக மிக நன்றி ஐயா! எல்லாம் தாங்கள் தரும் ஊக்கம்தான் காரணம்!

      Delete
  3. அருமையாய் விமர்சனம் எழுதியமைக்கும்
    பரிசு பெற்றமைக்கும் வாழ்த்துக்கள்! தொடருங்கள்!!!

    ReplyDelete
  4. Replies
    1. வாருங்கள்! நன்றி ஐயா! எங்கே கொஞ்ச நாளா தலயவே காணலியேன்னு நெனச்சேன்!

      Delete
  5. கதையைப்போல
    விமர்சனமும் மிக மிக அருமை
    பரிசுகள் தொடர மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. வணக்கம்,

    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்

    2 நாட்களாக பதிவை இணைக்கும் போது ஏற்பட்ட தவறு சரிசெய்யபட்டது.

    தற்போது பதிவை இணைக்கலாம்.

    தங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி.

    www.Nikandu.com
    நிகண்டு.காம்

    ReplyDelete
  7. வாழ்த்துகள்! தொடரட்டும் பரிசுமழை!

    ReplyDelete
  8. பரிசு பெற்றதற்கு மனமார்ந்த வாழ்த்துகள். மேலும் பல பரிசுகள் உங்களுக்குக் கிடைக்கட்டும்.

    ReplyDelete