Thursday, 19 December 2013

‘வேண்டும்’ விநோத ஆசைகள்

‘வேண்டும்’ விநோத ஆசைகள்
லைட் ஹவுஸ் உச்சியிலிருந்து
குதித்துப் பார்க்க வேண்டும்…!
சவப் பெட்டியில்பிணம் போல
படுத்துக் கொள்ள வேண்டும்...!
கடந்த வயதுகளை பின் தள்ளி
மீண்டும் காதலிக்க வேண்டும்...!
டிரவுசர் அணியும்பருவம் திரும்பி
தும்பி பிடித்துத் திரிய வேண்டும்…!
தாயின் கருவறைக் கதகதப்பில்
மீண்டு(ம்) இவ்வுலகில் பிறக்க வேண்டும்…!
ரவிஜி…

Monday, 28 October 2013

வாழ்க்கை...!


 

வாழ்க்கை…
என் செல்ல மகள் அனுப்பிய செல்லிடப்பேசியில்
படமாய் எடுத்த - பள்ளி சென்ற மிதிவண்டி…
பாடம் கற்க அவள் சென்ற மிதிவண்டி பழசாகி
இன்று(ம்) துணையாய் என்னோடு வயல்வெளியில்.
நான் பெ(க)ற்ற அருமை மகள் – தன் உற்ற துணையோடு
அமெரிக்க நயாகராவின் அருகாமைப் புல்வெளியில்.
என் கால்களின் சொந்தச் சுழற்சி – பாதையில்
தினம் ஓடும் - சேரிடம் ‘செல்ல’ மிதி வண்டி.
காலத்தின் சுழற்சியில் மெல்லவே நகர்கிறது
சிறுவனென அடம் பிடிக்கும் வாழ்க்கை நடைவண்டி.
                                                ரவிஜி…
(புகைப்படம் – ரவிஜி)

Wednesday, 23 October 2013

வ(வெ)றுமைத் தூளிகள்…!

வ(வெ)றுமைத் தூளிகள்…!
‘அம்மா’வென்றழைப்பதற்கும்
ஆருமில்லாத் தாய் மனம்
பிள்ளைச் செல்வம் வேண்டிடும்…
செலவிடவும் செல்வம் ஏதுமற்று-
சோகம் தீரக் க()ட்டி விடும்
வ(வெ)றுமைத் தூளிகள்…!
ரவிஜி…!
(புகைப்படம் : ரவிஜி)

வீ(ட்)டு பத்திரம்…?!

வீ(ட்)டு பத்திரம்…?!

விற்றுப் போன வீடான போதும்
விட்டு விலகும் நேரம் வந்த போதும்
தன் கண்ணீரால் புள்ளி வைத்து
தாளாமல் கோலமிட்ட - என் அம்மா!

‘பத்திரம்’ மாறிவிட்ட புரிதல் இல்லை
விட்டுப் பிரியும் சோகமும் அறியவில்லை;
பத்திர உணர்வுடன் வண்ணம் தீட்டிடும்
என் இரட்டை பட்டுக்குட்டிகள்...?!

ரவிஜி…
(புகைப்படங்கள் – ரவிஜி…)

மாம்பழ(கன்ன)ம்…!

மாம்பழ(கன்ன)ம்…!
மாம்பழமும்-
தோற்றுப் போகும்…
என்
மகளின்
கதுப்புக் கன்னம்…!

ரவிஜி…
(புகைப் படம் நன்றி கூகிள்)

Saturday, 19 October 2013

'நாம்' சிரித்தால் தீபாவளி



 








'நாம்' சிரித்தால் தீபாவளி

கள்ளம் ஏதுமில்லாக் குழந்தையின் பூஞ்சிரிப்பு
கண்கள் சுருங்கிட்ட ஆத்தாவின் குறுஞ்சிரிப்பு
தீயெனவே எரித்திருக்கும் பசி தீர வரும் சிரிப்பு
புகழ்ச்சிக்கு மயங்காதோன் சிந்தும் இதழ்விரிப்பு
சமயத்தில் உதவிக்கு நன்றியாய் புன்சிரிப்பு
வெற்றியின் களிப்பதனில் வெளியாகும் வெடிச்சிரிப்பு                      
காதலி()ன் பார்வையிலே  சிவந்திடும் வெட்கச்சிரிப்பு
மகள் பிறந்த மகிழ்ச்சிதனில் அப்பாவின் பூரிப்பு
மகன் பெற்ற வெற்றியிலே அம்மாவின் பிரதிபலிப்பு
சிரிப்புகள் பலவாகும் உணர்வுகளோ ஒன்றாகும்.
சிரிக்க மறந்த  மனிதனோ பேசத்தெரிந்த மிருகம்
சிரிப்பறியா மிருகமும் உணர்த்திடும் நல் மனிதம்.
அழுகையும் சிரிப்பின் பிரிக்கமுடியா மறுபாதி
கண்ணீரும் புன்னகையின் சரிபாதி - மறுமீதி
மற்றவர் மகிழ்ச்சியில் கலந்து நாம் சிலிர்த்திட்டால்
துன்பம் எதிர்கொள்ள நிமிர்ந்து நாம் சிரித்திட்டால்
சிரிப்பிலே ஒளிர்ந்திடும் பற்களின் ஆவளி
தினமும் பண்டிகையாய் தித்திக்கும் - தீபாவளி.

ரவிஜி…

(ரூபன் அவர்களின் தீபாவளி சிறப்புக் கவிதைப் போட்டிக்கான கவிதை)

(புகைப்படம் கூகிளுக்கு நன்றி)

Thursday, 19 September 2013

அப்பா (ச) விழிகள்

அப்பா (ச) விழிகள்

காகித ஓநாய் முகத்தில்
பனிக்கும் அப்பா(ச) விழிகள்!
புரிந்த மகளின் தாமரையில்
சிணுங்கிடும் சிரிப்புச் சலங்கைகள்!
ரவிஜி…

(புகைப் படம் :  நன்றி சுபாஷ் & ரோஷி)

Thursday, 29 August 2013

சு(உ)ருக்கம்….!

சு(உ)ருக்கம்….!

சுருக்கங்கள் மேவினாலும்
நெருக்கத்தில் குறைவில்லை
உருக்கத்திலும் மறைவில்லை…
ஈடில்லாத் திருமண பந்தம் !
ரவிஜி…!
(புகைப்படம் : நன்றி கூகிள்)

Sunday, 18 August 2013

‘உயிர்’ ஓட்டம்

‘உயிர்’ ஓட்டம்
வயிற்றுக்கும் வாழ்க்கைக்கும்
இடையே
ஓய்வின்றித் தொடரும்
‘உயிர்’ ஓட்டம்!
ரவிஜி…!
(புகைப்படம் : நன்றி கூகிள்)

Wednesday, 14 August 2013

காதல் சிற்பம்...!



காதல் சிற்பம்...!
என்
இதயம் செதுக்கிய
காதல்
சிற்பம் –
நீ!
உன்
மனம் திறந்தால்
அது-
கண் விழிக்கும்!
ரவிஜி…
(பென்சில் ஓவியம் - நன்றி கூகிள்)

 

Friday, 2 August 2013

‘பட்டு’ப்போன மரம்..?!


‘பட்டு’ப்போன மரம்..?!
பெறாமல் போன பிள்ளை...
சொல்லாமலே போன கணவன்...
வெறுத்திடவும் எவரும் இல்லை
காதறுந்த ஓர் செருப்பும் இல்லை.

கள்ளிக் காட்டிடையே
முள்தைத்த கால் கடுக்க
சுமந்த சுள்ளிக் கட்டிறக்கி
சா()ய்ந்து நின்றேன் காலாற…!

என் வயிற்றுத் தீயாற
இன்றிரவு அடுப்பெரிக்க
மீண்டு(ம்) சுமக்க வேண்டும்
‘பட்டு’ப்போன மரம் நான்…??
ரவிஜி…
(பட உதவி – காரஞ்சனின் வலைப் பூ)

 

Tuesday, 30 July 2013

'கட்டு'சோறு...

‘கட்டு’ச் சோறு…!

கட்டுச் சேவல்களின்
கட்டற்ற கூவல்களில்
துவங்கிடும் இன்றைய பயணங்கள்…
கட்டுப்பாடற்ற வயிறுகளின்
கட்டுச் சோற்றுக்காய்…அவற்றின்
ஈறுதிப் பயணங்கள்…!
ரவிஜி…
(கவிதை மற்றும் புகைப்படம் : ரவிஜி)

Wednesday, 22 May 2013

பயன்பாடு…!

பயன்பாடு…!
சிறகொடிந்த
வண்ணத்துப் பூச்சி…
பறக்கமாட்டாமல்
வந்தமர்ந்ததோ-
தரையிறங்கிட்ட
பறவைக்கூடு!
உதவிக்கு வந்திடுமா-
உதிர்ந்திட்ட
பறவைச் சிறகு…?
               ரவிஜி…
(புகைப்படம் - ரவிஜி...)

Thursday, 9 May 2013

பரிட்சை…?!

பரிட்சை…?!
வெற்றியைத் தொட்டவர்
உயர்த்திடும் விற்புருவம்…
விட்டவர் விழியோரம்
துளிர்த்திடும் துளிஈரம்…
தொட்டிட்ட வெற்றியோ
சிகரத்தில் சேர்க்கும்…
வீழாமல் இருந்திட
தேவை நல் நிதானம்.
இடரிடும் தோல்வி
பாதாளம் காட்டிடும்…!
என்றாலும் வென்றிட
உன்னை அது உசுப்பிடும்…!
தோல்வியும் வெற்றியின்
மற்றுமோர் அறிகுறி
உணர்ந்து நடக்காதவன்
தேறாத தற்குறி!
ரவிஜி…
                                               (புகைப்படம் : நன்றி கூகிள்)

Wednesday, 8 May 2013

'வேர்'வை...



‘வேர்’வை…!
மகளுக்கு
சாப்ட்’வேர்’
படிப்பு…
தந்தையின்
‘ஹார்ட்’
‘வேர்’வை
உழைப்பு…!
ரவிஜி…
(புகைப்படம் : நன்றி கூகிள்)

Sunday, 5 May 2013

நான்...?!


நான்…!
நியாயமற்றதாய்
என் மீது எவரும்
குற்றம் சாட்டிட
கள் குடித்த,
குரங்கெனத் துள்ளி,
தேளாய் திருப்பி
கொட்டிடும் என் மூளை!
பாசத்தால் – யாரும்
அரவணைத்தாலும்
நேசத்தில் ஊறிய
வார்த்தை தந்தாலும்
கண்ணீர்த் துளிகளால்
நன்றி சொல்லிடும்
மவுனமாய்
என் – இதயம்…!
… … … … …
நாவும் உதடுகளும்
மூளையின் கருவிகள்.
கண்களோ - இதயத்தின்
வாசற் கதவுகள்.
ரவிஜி
(படம் : நன்றி கூகிள்)

புது டில்லி…

புது டில்லி…
சு'தந்திர' கா(நா)ட்டில்
துள்ளித் திரியும்
புள்ளி மான்கள்…
துவண்டு மருளும்
மழலை மாறாது
மான் குட்டிகள்…
பேதம் பாராது
எச்சில் சுரக்க-
ரத்தம் சுவைக்கும்,
காட்டுப் புலிகள்.
குதறும் பற்களை
சிதற அடித்தால்-
நீளும் நாக்கினை
வெட்டி எறிந்தால்-
ஆடும் வாலினை
அறுத்து வீசினால்-
துடிக்கும் துப்பாக்கியால்
வெடித்துக் கொன்றால்-
ஆடும் புலிகளின்
ஆட்டம் – ஓயும்.
ரவிஜி…
(புகைப் படம் - நன்றி கூகிள்)