Saturday 16 April 2016

இறு(தீ)திப் பயணம்!



இறு(தீ)திப் பயணம்!
“ஐயோ அவரா… ரொம்ப நல்ல மனுஷனாச்சே…!
வீட்டுக்கு ‘பாடி’ய எடுத்துகிட்டு வந்தாச்சா?
கண்ண ரெண்டயும் தானம் குடுத்தாச்சா…?
எத்தனை மணிக்கு எடுக்கப் போறாங்க?”
கேள்வியுறும் மனிதர்கள் ஒவ்வொருவர்க்கும்
வெவ்வேறாக இருக்கின்றன கேள்விகள்!
விபூதிப்பட்டை நடுவே ஒரு ரூபாய் பொட்டு;
சிலருக்கு கூலிங் கிளாஸ், கோட்டு-சூட்டு;
போகும் வழியதனில் வெடிக்கும் வேட்டு;
அசையும் தேரெனவே பூக்களால் பல்லக்கு;
இதுநாள் கண்டதில்லை இன்று குளிர்பெட்டி---
வாசலில் கிடத்தி சுற்றீலும் பேச்சு-வெ(வே)ட்டி!
அரைவயிறும் உண்டதில்லை-இன்று ‘ஆனந்த’பவன்
வந்ததில் பலபேர் வாசலுடன் திரும்பிச் செல்ல,
பெண்டிர் பாச(மு)சுற்றும் தெருவில் நின்றுபோகும்!
சூட்டிய மாலைகள் வழியில் உதிர்(ந்)த்துப்போகும்,
தட்டிய வரட்டி, மரம் உடைத்த கட்டையாலும்
இறுதிப் படுக்கையில் வாயில் கொஞ்சம் அரிசி;
கண்ணில் முகம் மறையும் நேரமிது ‘நீ - தரிசி’!
வாழ்க்கை முடிந்(த்)தோர்க்கு தீயில் ஒரு வேள்வி;
திரும்பும் வழிதனிலே  எழும்(ப்)பும் பல கேள்வி;
வாழ்நாள் முழுதிலும் உடுத்திடக் கொடுத்தோமா?
ஒருவேளை உணவேனும் மனதார()த் தந்தோமா?
அன்பாய் கனிவாய் அரைவார்த்தை விசாரிப்பு…?
மாந்தர்தம் தீமைகள் தீயோடு தீய்ந்து-போகும்;
பாயிலே ஓயுமுன்னே நன்மை செய்திருப்போம்;
உடலுக்கு மரியாதை இறுதியிலே செய்வதிலும்-
இருக்கும் காலமதில் இனியவை தந்திருப்போம்!
வேஷம் ஏதுமில்லா பாசம் காட்டிடுவோம்.
போனவர் வாழ்க்கையிலே பாடம் பெற்றிட்டால்-
இருக்கும் மனிதர்களின் பாதைகள் இனிதாகும்.
கண்ணீர்த் துளிகளிலே பாடம் எ()னக்கிருக்கும்;
இறுதியிலே மூட்டும் தீ எ()னக்கும் காத்திருக்கும்!
ரவிஜி---
(படங்கள் - ரவிஜி; இடம் - காசி, அரிச்சந்திரா படித்துறை)

2 comments:

  1. அருமையான வரிகள் ஜி! அதுவும் இறுதி வரிகள்...

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் நண்பரே! மிகவும் நன்றி!!

      Delete