Tuesday, 27 January 2026

இலக்கிய மாமணி பேரா.முனைவர், ஞானசுந்தரம் ஐயாவின் மறைவுக்கு அஞ்சலி

 

இலக்கிய மாமணி பேரா. முனைவர், ஞானசுந்தரம்!

குழையூரில் உதித்த உயர் ஞானசுந்தரம்

சுந்தரமும் ஞானமும் குழைந்த நல்மந்திரம்

கம்பன் உதித்த தேரிழந்தூர் நெருக்கம்

பைந்தமிழ் பெற்றது உம்மாலே சிறப்பும்

தமிழில் உயரம் நெடிதுயர்ந்த தென்னை

குழந்தைச் சிரிப்போ வெடிக்கும் பாளை

தாய்மொழித் தமிழ் உமக்கு ருசிக்கும்

தலைமகன் உங்களைத் தமிழே ரசிக்கும்

தாய்மொழி, வடமொழி, அன்னிய ஆங்கிலம்

பாரதி போலவே எதிலும் பாண்டித்தியம்

மேடையில் தமிழால் பரிமாறிய விருந்துகள்

விரும்பியே உம்மை நாடின விருதுகள்

இசையால் இறையையும் அசைத்த ராஜா

இசைபட இணைத்தது தமிழின் தாஜா

 புதுவைப் பல்கலையின் கம்பன் இருக்கை

உம்மால் எட்டியது முதலாம் செருக்கை

தமிழ்ப் பல்கலை கையெழுத்துச் சுவடித்துறை

மூழ்கி முத்தெடுத்த தமிழின் படித்துறை

செம்மொழி நிறுவனத்தில் துணைத் தலைவர்

பதவிக்கே பெருமைசேர் தமிழ்ப்பேரறிஞர்

பாடநூல் பயின்று பட்டங்கள் பெற்றார்

பட்டங்கள் பெற்றும் நூல்கள்  வெளியிட்டார்

தமிழில் வென்றது முதுமுனைவர் பட்டம்

அள்ளித் தரும் அன்பு இனியெங்கே கிட்டும்

குணத்தில் எளிமை! பேச்சிலோ இனிமை!

உள்ளமோ வெண்மை! விரும்புவது உண்(ம்)மை!

தமிழில் ஐயங்கள் தீர்த்துவைத்த கணக்காயர்

இறுதியாய் ஆற்றிய உரையிலோ பெரியாழ்வார்

அளவு அகவை அறிவிலும் நான் குறைவு!

ஆனாலும் என்னிடம் கொண்டிருந்த நட்பு

தமிழில்  தினமெழும் புதுப்புது ஐயம்

இனி எவரால்  எனக்கு எப்படித் தீரும்?

காலம் முடிவதோ காலனுக்கே தெரியும்

உற்றாரின் கண்களில் கண்ணீர் உறையும்

சொர்க்கத்தின் வாசல் விரியத் திறக்கும்!

அரியாசனம் அங்கேயும் எதிர்நோக்கிக் காத்திருக்கும்!

ஆற்றிய தமிழ்த் தொண்டு காலமெலாம் நிலைக்கும்!

ரவிஜி…