Tuesday 30 June 2020

‘ஞாயிறி’ன் ஞாயிறு…!



     ‘கவிஞர் கணக்காயன்’ என்று அவருடன் கவியரங்கங்களில் ஒரே மெடையில் பங்கு பெற்ற ஆகப் பெரிய கவிஞர்களான கவியரசு. கண்ணதாசன், வாலிபக் கவிஞர் வாலி, கவிஞரும் முன்னாள் அமைச்சருமான வேழ வேந்தன் மற்றும் பலராலும் என்னைப்போன்ற சில துக்கடாக்களாலும் அறியப்பட்ட, அனைவரின் அன்பைப் பெற்ற கவிஞர் திரு. இ.சே. இராமன் அவர்கள் ஆயிரம் பிறைகண்ட பின்னர் தான் எழுதிய, தனக்கு எழுதப்பட்ட கவிதைகளை ஒரு தொகுப்பாக “கணக்காயன் கவிதைகள்” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளார். அதில் ஒரு பிரதியை தன் கையொப்பமிட்டு எனக்கு அன்புடன் அளித்தார். அவர் தொகுத்துள்ள 251 கவிதைகளில் நான் எனது மனந்தோன்றியபடி அவரின் 70ம் அகவையின் போது சந்திக்க வாய்த்த சமயத்தில் எழுதிக்கொடுத்த கவிதை(..?)க்கு 17ம் கவிதையாக இடமளித்து (தன் இதயத்திலும் இடம் கொடுத்ததைப்போல) கெளரவப்படுத்தியுள்ளார்.
     எதையுமே கவித்துவத்துடன், எதுகை மோனையுடன், நகைச்சுவை உணர்வுடன் வெளிப்படுத்துவது இவரின் பெரும் சிறப்பு. நிறையவே எழுதுமாறு சற்றே சொம்பேறியான என்னையும்கூட ஊக்குவித்து வருபவர். ஓய்வு பெற்ற தமிழாசிரியரான இவர், தமிழக முன்னாள் முதல்வரான திரு. மு. கருணாநிதி அவர்களின் மாபெரும் ரசிகர். நானும், கவிஞர் கணக்காயன் அவர்களின் மாப்பிள்ளையான திரு. ஈ.சீ. சேஷாத்திரி அவர்களும் மக்கள் திலகம் திரு. எம்.ஜி.ஆர். அவர்களின் ரசிகர்கள். திரு.எம்.ஜி.ஆர் மற்றும் திரு. கருணாநிதி அவர்களிடையே நிலவிய ஆழ்ந்த நட்பைப்போலவே எங்களின் நட்பும் அமைந்தது. தனது மகன்கள் மற்றும் மகள்கள் அனைவருக்கும் தூய தமிழ்ப் பெயர்களையே வைத்துள்ளார். பேசும்பொழுது பிற மொழிக்கலப்பின்றிப் பேசுவது இவரின் மற்றொரு சிறப்பு. ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்தும்போது அதிலும் எதுகை-மோனை இருக்கும்.  பொடி போடுபவர்கள் தான் நன்றாக பொடியை உறிஞ்சி, தும்மலின்றி கையை உதற மற்றவர்கள் தும்மல் போடுவார்கள். அதுபோல இவரும் ஒரு நகைச்சுவையை சர்வசாதரணமாக சொல்லிவிட்டு கேட்பவர்கள் சில வினாடிகள் சிந்தித்து, சிரிக்க இடம் கொடுத்து பின்னர் தானும் சேர்ந்து சிரித்து மகிழ்வது இவருக்கு வழக்கமான ஒன்று. இன்னும் இவரிடம் இயல்பான குழந்தைத்தனமும், குதூகலமும் தொற்றிக்கொண்டிருக்கக் காரணம், இவரின் வாழ்க்கைத் துணையாய் அமையப்பெற்ற திருமதி. அர. வனஜாமணி அவர்கள்தான் என்றால் அது கொஞ்சமும் மிகையில்லை. அவர்களும் ஓய்வுபெற்ற ஆசிரியை என்பது கூடுதல் சிறப்பு. இதற்குதான் என்றல்லாது எதற்கும், எவர்க்கும் கவிதை படைத்துவிடும் பெருந்தன்மை இருப்பதனால் இவரின் படைப்புகள் ஏராளம்-ஏராளம். இந்த முதல் தொகுப்பு ஒரு ஷோ-கேஸ்தான். இன்னும் குடவுன் அளவுக்கு இவரிடம் மீதமிருக்கும் கவிதைகள் நிறைய உண்டு. தனது 90ல் ஒன்றும் 100ம் அகவையில் ஒன்றும் என இவர்மேலும் கவிதைத் தொகுதிகள் வெளியிடுவது தொடரவேண்டுமென்பது எனது வேணவா. எனது சிரம் தாழ்த்திய வணக்கங்கள் கவிஞர் திரு. கணக்காயன் அவர்களே.
என்றென்றும் அன்புடன்...
விஜி
(ஒரு முறை இவர் சென்னையிலிருந்து புதுவை வந்த மறுநாள் காலை என்னை அலைபேசியில் அழைத்தபோது ஞாயிறான அன்று நான் தூக்கக் கலக்கத்தில் எதையோ சொல்லிவிட்டு மீண்டும் தூங்கிவிட்டேன். ஞாயிறு காலை ஆறரை என்பது எனக்கு நடு ராத்திரி அல்லவா.       கண்விழித்ததும் வடிவேலு பாணியில…ஆஹா..என்று எண்ணி இதனைக் கிறுக்கி, அலைபேசியில் அழைத்துப் படித்தேன்.  மிகவும் மகிழ்ச்சியடைந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பாக பழைய நாட்குறிப்பில் கிடைத்த இதை இன்று இவரது கவிதைத் தொகுப்பு பற்றிய குறிப்புடன்
வெளியிடுவதில் மிகவும் மகிழ்கிறேன்.)



ஞாயிறி’ன் ஞாயிறு…!
ஞாயிறும் ஓய்வெடுக்கும் ஓர் ஞாயிறில்,
திங்கள் உலவும் நேரந்தான் எனக்கு.
ஞாலம் விழிக்கத் துவங்கி – என்னில்
ஞானம் இன்னும் துயிலெழாத நேரம்;
சிணுங்கத் துவங்கும் என் செல்பேசி.
ஞாயிறை அணைத்திருந்த நித்ராதேவி
“யாரிந்த வேளையில் – ராவணன்..?”என,
செல்லிடப் பேசியோ(ர்) செல்லக் குரலில்-
“நான் உங்களின் நலம் விரும்பும்,
பண்ணேற்றிவரும் பொன்னேரி ராமன்” என,
நித்திரை போதாதென விழித்திரை கெஞ்ச;
‘வா’வென மீண்டும் நித்திரா அழைத்துக்கொஞ்ச:
ஆதவனோ அவ்வணைப்பில் வீழ்ந்தான் துஞ்ச!
ஞாயிறின் ஞாலம் மீண்டு(ம்) விழித்தது;
இரவி’யின் விடியலில் கவிதை பழித்தது:
“நலம் நலமறிய ஆவல் கணக்காயரே…
நீவிர் ஆகிடவேண்டாம் பிணக்காயரே” என.
விஜி



4 comments:

  1. சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுகள். எனக்கும் நூலை அனுப்பி வைத்திருக்கிறார். பாதிக்கு மேல் படித்து விட்டேன் - நின்று நிதானித்து வாசிக்க வேண்டிய நூல். ஆசிரியருக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    ReplyDelete
  2. அருமையான, கோர்வையான பாராடுப் பதிவு!
    மிகவும் மகிழ்ந்தேன்! நன்றி நண்பரே!

    ReplyDelete