Wednesday 30 September 2015

‘செல்’லிட(க்கு)ப் பேசி!



‘செல்’லிட(க்கு)ப் பேசி!
கைக்கட்டும் கடிகாரம்
ஆடம்பரம் என்றானது;
கணக்கிடும் கால்குலேட்டர்
காலாவதியாகிப் போனது;
அதிகாலை அலார டைம்பீஸ்-
ஆதரவே தேவையில்லை;
அலங்காரப் பொருளாகி
அலமாரியில்  ரேடியோ;
வாக் மேன் என்பதோ-
வக்கற்றதாய் வீணானது;
தந்தி என்ற சேவையை-
கடந்த காலமாக்கியது;
தரைவழிப் பேசியையும்-
தரையிலே வீழ்த்தியது;
கணிணிகூட  மதிப்பிழந்து-
போட்டியிலே தேய்ந்தது;
எங்கெங்கும் உற்றதாய்-
எல்லாம் பெற்றதாய்,
செல்லும் இடமெல்லாம்-
செல்’லரித்த இடமாக்கி;
முகநூலில் மூழ்கிப்போய்
முகமற்று ‘செல்பி’ஷ் ஆன-
மட மனிதனைக் ‘கண்டு’
கைகொட்டிச் சிரிக்கிறது
‘ஸ்மார்ட்’ஆன கைப்பேசி!
ரவிஜி...
                        (புகைப்படங்கள்: நன்றி கூகிள்)
(வலைப் பதிவர் சந்திப்பு 2015 புதுக்கவிதைப்போட்டிக்கான கவிதை)



மண(ன)க்கோலம்…!



மண()க்கோலம்…!
தொங்கும் தோரண விளக்கோடு
வைத்த பெரும் பிளக்ஸ் போர்டு!
கைகூப்பி தலையாட்டி வரவேற்க
வார்த்தையில்லா ஓர் பொம்மை!
மின் விசிறியாய் சுற்றிச் சுழலும்
இயந்திரம் பன்னீர் தெளிக்கும்!
நாம் பேசுவது நமக்கே கேளாது-
உரக்கப் பாடும் ஆர்க்கெஸ்ட்ரா!
உபசரிக்க ஆளின்றி இலை நிறைய
‘கொட்டும்’ பலவகை பகட்டு உணவு!
வந்த அன்பளிப்பை பெயர் மாற்றி
வண்ண உறைமூடி எடுத்துவ()ரும்;
கைகுலுக்கிப் பிரிந்து செல்லும்-
காகிதப்பூ நே(வா)சமாய் இக்காலம்!
உற்றஅண்ணன் தங்கைகளோடு
தெருவடைத்து ஒரு பந்தலிட்டு
தோரணங்கள் பல தொங்கவிட்டு
சாதி மத பேதமின்றி ஒன்றாய்-
ஒரே உலை ஒன்றே சோறென
ஓரிடத்தே ஒன்றுகூடி உ()ழைத்து
பெற்ற மகளெனவே வரித்து
தொங்கும் மஞ்சள் கயிற்றோடு
துள்ளும் மாட்டு வண்டியிலே
மாப்பிள்ளையொடு அனுப்பிட்ட
அக்காலமே எ()ன்றும் பொற்காலம்!
                                                                       ரவிஜி---
                      (புகைப்படங்கள்: நன்றி கூகிள்)
(வலைப்பதிவர் சந்திப்பு 2015 நிமித்தமாக நடத்தப்படும் கவிதைப்போட்டிக்காக எழுதப்பட்டது)