Monday 28 October 2013

வாழ்க்கை...!


 

வாழ்க்கை…
என் செல்ல மகள் அனுப்பிய செல்லிடப்பேசியில்
படமாய் எடுத்த - பள்ளி சென்ற மிதிவண்டி…
பாடம் கற்க அவள் சென்ற மிதிவண்டி பழசாகி
இன்று(ம்) துணையாய் என்னோடு வயல்வெளியில்.
நான் பெ(க)ற்ற அருமை மகள் – தன் உற்ற துணையோடு
அமெரிக்க நயாகராவின் அருகாமைப் புல்வெளியில்.
என் கால்களின் சொந்தச் சுழற்சி – பாதையில்
தினம் ஓடும் - சேரிடம் ‘செல்ல’ மிதி வண்டி.
காலத்தின் சுழற்சியில் மெல்லவே நகர்கிறது
சிறுவனென அடம் பிடிக்கும் வாழ்க்கை நடைவண்டி.
                                                ரவிஜி…
(புகைப்படம் – ரவிஜி)

Wednesday 23 October 2013

வ(வெ)றுமைத் தூளிகள்…!

வ(வெ)றுமைத் தூளிகள்…!
‘அம்மா’வென்றழைப்பதற்கும்
ஆருமில்லாத் தாய் மனம்
பிள்ளைச் செல்வம் வேண்டிடும்…
செலவிடவும் செல்வம் ஏதுமற்று-
சோகம் தீரக் க()ட்டி விடும்
வ(வெ)றுமைத் தூளிகள்…!
ரவிஜி…!
(புகைப்படம் : ரவிஜி)

வீ(ட்)டு பத்திரம்…?!

வீ(ட்)டு பத்திரம்…?!

விற்றுப் போன வீடான போதும்
விட்டு விலகும் நேரம் வந்த போதும்
தன் கண்ணீரால் புள்ளி வைத்து
தாளாமல் கோலமிட்ட - என் அம்மா!

‘பத்திரம்’ மாறிவிட்ட புரிதல் இல்லை
விட்டுப் பிரியும் சோகமும் அறியவில்லை;
பத்திர உணர்வுடன் வண்ணம் தீட்டிடும்
என் இரட்டை பட்டுக்குட்டிகள்...?!

ரவிஜி…
(புகைப்படங்கள் – ரவிஜி…)

மாம்பழ(கன்ன)ம்…!

மாம்பழ(கன்ன)ம்…!
மாம்பழமும்-
தோற்றுப் போகும்…
என்
மகளின்
கதுப்புக் கன்னம்…!

ரவிஜி…
(புகைப் படம் நன்றி கூகிள்)

Saturday 19 October 2013

'நாம்' சிரித்தால் தீபாவளி



 








'நாம்' சிரித்தால் தீபாவளி

கள்ளம் ஏதுமில்லாக் குழந்தையின் பூஞ்சிரிப்பு
கண்கள் சுருங்கிட்ட ஆத்தாவின் குறுஞ்சிரிப்பு
தீயெனவே எரித்திருக்கும் பசி தீர வரும் சிரிப்பு
புகழ்ச்சிக்கு மயங்காதோன் சிந்தும் இதழ்விரிப்பு
சமயத்தில் உதவிக்கு நன்றியாய் புன்சிரிப்பு
வெற்றியின் களிப்பதனில் வெளியாகும் வெடிச்சிரிப்பு                      
காதலி()ன் பார்வையிலே  சிவந்திடும் வெட்கச்சிரிப்பு
மகள் பிறந்த மகிழ்ச்சிதனில் அப்பாவின் பூரிப்பு
மகன் பெற்ற வெற்றியிலே அம்மாவின் பிரதிபலிப்பு
சிரிப்புகள் பலவாகும் உணர்வுகளோ ஒன்றாகும்.
சிரிக்க மறந்த  மனிதனோ பேசத்தெரிந்த மிருகம்
சிரிப்பறியா மிருகமும் உணர்த்திடும் நல் மனிதம்.
அழுகையும் சிரிப்பின் பிரிக்கமுடியா மறுபாதி
கண்ணீரும் புன்னகையின் சரிபாதி - மறுமீதி
மற்றவர் மகிழ்ச்சியில் கலந்து நாம் சிலிர்த்திட்டால்
துன்பம் எதிர்கொள்ள நிமிர்ந்து நாம் சிரித்திட்டால்
சிரிப்பிலே ஒளிர்ந்திடும் பற்களின் ஆவளி
தினமும் பண்டிகையாய் தித்திக்கும் - தீபாவளி.

ரவிஜி…

(ரூபன் அவர்களின் தீபாவளி சிறப்புக் கவிதைப் போட்டிக்கான கவிதை)

(புகைப்படம் கூகிளுக்கு நன்றி)